Published : 10 May 2024 04:06 AM
Last Updated : 10 May 2024 04:06 AM
கொடைக்கானல்: இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைந்துள்ளது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் அளவுக்கு அதிகமான வாகனங்களின் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை தவிர்க்க மே 7 முதல் ஜூன் 30-ம் தேதி வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல இ-பாஸ் முறையை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மே 7 முதல் இ-பாஸ் முறை அமலுக்கு வந்தது. உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு என 3 நிறங்களில் இ-பாஸ் வழங்கப்படுகிறது.
கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சுங்கச்சாவடியில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பிறகே, அனைத்து வாகனங்களும் நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன. கரோனா காலத்தில் இ-பாஸ் வழங்கப்பட்டதைபோல அல்லாமல், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. இருப்பினும் இ-பாஸ் நடைமுறைக்கு வரும் முன்பு இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையைவிட, தற்போது மிகவும் குறைவாக உள்ளது.
பிரையன்ட் பூங்கா, ரோஜாப் பூங்கா, தூண் பாறை, ஏரிச்ச சாலை உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடிக் காணப் படுகின்றன. கோடை காலம் தொடங்கும் முன்பே சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிந்த சுற்றுலா மையங்கள் மற்றும் வாகனங்கள் நிறைந்த சாலைகள் தற்போது பெரிய அளவுக்கு ஆட்கள் நடமாட்டமின்றிக் காணப்படுகின்றன.
இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானல் விடுதி உரிமையாளர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ளோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இ-பாஸ் போன்ற நடைமுறைகள் இல்லாத வேறு இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தொடங்கி விட்டனர். எனவே, இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கொடைக்கானல் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அப்துல்கனி ராஜா கூறும்போது, இந்த ஆண்டு கோடை சீசன் தொடங்கிய நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் இருந்தது. இ-பாஸ் நடைமுறைக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளை நம்பியுள்ள அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சீசன் காலங்களில் தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைப்பதே சிரமமாக இருக்கும். ஆனால், தற்போது 25 சதவீத அறைகள் கூட புக்கிங் ஆகவில்லை.
ஆன்லைனில் தங்கும் அறைகள் புக்கிங் செய்தவர்கள், இ-பாஸ் கட்டுப்பாடு காரணமாக அறைகளை ரத்து செய்து வருகின்றனர். இந்த 2 மாத வருவாயை நம்பித்தான் ஆண்டு முழுவதும் பிழைக்கிறோம். விடுதி உரிமையாளர்கள் மட்டுமல்ல, சுற்றுலாப் பயணிகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, தமிழக அரசு தலையிட்டு இ-பாஸ் முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இ-பாஸ் குறித்து அறியாத சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் வந்த பிறகே பதிவு செய்யும் நிலை உள்ளது. அப்போது, இன்டர்நெட் வசதி இல்லாமல் இ-பாஸுக்காக பதிவு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, இ-பாஸ் பதிவுக்கு விண்ணப்பம் வழங்கி, அதில் சுற்றுலாப் பயணிகளின் விவரங்களை பூர்த்தி செய்து பெற்றால், உதவியாக இருக்கும் என்றார்.
கொடைக்கானலைச் சேர்ந்த சாக்லேட் வியாபாரி அப்பாஸ் கூறும்போது, கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகளே இல்லாத கொடைக்கானலை இப்போது தான் பார்க்கிறேன். சீசன் காலத்தில் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் கொடைக்கானல், தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. சீசன் காலங்களில் தினமும் ரூ.20 ஆயிரம் வரை சாக்லேட் விற்பனையாகும். தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.2,000-க்கு மட்டுமே விற்பனையாகிறது.
இ-பாஸ் கட்டுப்பாடு காரணமாக சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் கடனாளியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை சீசன் முழுவதும் தொடர்ந்தால், கடை வாடகை, கடனை திருப்பிச் செலுத்துவதே எங்களுக்கு சிரமம் தான். எனவே, இ-பாஸ் முறையை ரத்து செய்து, சுற்றுலாப் பயணிகள் எப்போது போல் சுதந்திரமாக வந்து செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT