Published : 07 May 2024 04:10 AM
Last Updated : 07 May 2024 04:10 AM

கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெற சுற்றுலா பயணிகள் ஆர்வம் - ஏராளமானோர் பதிவு

பிரதிநிதித்துவப் படம்

கொடைக்கானல்: கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இன்று (மே 7) முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நேற்று காலை 6 மணி முதல் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் ஏராளமானோர் ஆர்வமுடன் பதிவு செய்து இ-பாஸ் பெற்றனர்.

கோடை சீசனையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது போன்ற காலங்களில் அளவுக்கு அதிகமான வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, இன்று (மே 7) முதல் ஜூன் 30 வரை கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இ-பாஸ் முறையை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள், இ-பாஸ் பெறுவதற்கான epass.tnega.org என்ற இணைய முகவரி ஆகியவை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. நேற்று (மே 6) காலை 6 மணி முதல் இ-பாஸ் பெறுவதற்கான பதிவுகள் தொடங்கின. நாடு முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் பெயர், முகவரி, எந்த வாகனத்தில் வருகை, எத்தனை நபர்கள், தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பதிவு செய்த உடன் இ-பாஸ் வழங்கப்படுகிறது. இ-பாஸ் கால அவகாசம் உள்ளிட்ட விவரங்களை ‘க்யூஆர்’ கோடு மூலம் தெரிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

3 நிறங்களில் இ-பாஸ்: இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அவர்களது செல்போன் வாயிலாகவும், வெளிநாடுகளில் இருந்து வருவோர் இ-மெயில் முகவரி வாயிலாகவும் அடிப்படை விவரங்களைச் சமர்ப்பித்து இ-பாஸ் பெறலாம். அரசு பேருந்துகளில் வருவோர் இ-பாஸ் பெற வேண்டியதில்லை. இ-பாஸ் 3 வகையான அடையாளங்களுடன் வழங்கப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு பச்சை நிறமும், வேளாண் விளை பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள், சரக்கு வாகனங்களுக்கு நீல நிறமும், சுற்றுலா மற்றும் வரத்தக ரீதியான வாகனங்களுக்கு ஊதா நிற அடையாளத்துடன் இ-பாஸ் வழங்கப்படுகிறது.

உள்ளூர் வாகனங்கள் ஒரு முறை மட்டுமே விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றால் போதும். ஆனால், உள்ளூர் மக்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கும் போது ‘ஏற்கெனவே உங்கள் கோரிக்கை பெறப்பட்டுள்ளதால் வட்டாரப் போக்குவரத்து அலுவலரை தொடர்பு கொள்ளவும்’ என்பது போன்ற குறுஞ்செய்தி வருவதால் குழப்பம் அடைந்துள்ளனர். ஜூன் 30-ம் தேதி வரை கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களும் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சுங்கச் சாவடியில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படும்.

மேலும் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் தடை செய்யப்பட்டுள்ளதால், மீண்டும் உபயோகிக்கும் பாட்டில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

போக்குவரத்து நெரிசல் அபாயம்: பெருமாள்மலையில் இருந்து கொடைக்கானல் நகருக்குள் நுழையும் சுங்கச்சாவடி வரை மிக குறுகலான சாலையாக உள்ளது. அதனால் இ-பாஸ் சோதனையின் போது வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படும். அப்போது, கொடைக்கானல் நகருக்குள் செல்லும் மற்றும் நகரில் இருந்து வெளியே வரும் வாகனங்களால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகவே, பெருமாள்மலை பகுதியில் சோதனை சாவடி அமைத்து, வத்தலக்குண்டு மற்றும் பழநி வழியாக கொடைக்கானல் வரும் வாகனங்களில் இ-பாஸ் சோதனையை மேற்கொள்ளலாம். இதன்மூலம், பெருமாள்மலையில் இருந்து வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x