Published : 06 May 2024 04:18 AM
Last Updated : 06 May 2024 04:18 AM
உதகை / கொடைக்கானல்: நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலாசெல்ல இ-பாஸ் பெறுவதற்கான இணைய முகவரி வெளியிடப்பட்டுள்ளது.
நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல இ-பாஸ் பெற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நீலகிரி மாவட்டத்துக்கு நாளை (மே 7)முதல் சுற்றுலாப் பயணிகள் வரும்வாகனங்கள் குறித்த முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். epass.tnega.org என்ற இணைய முகவரியில் இன்று (மே 6) காலை 6 மணி முதல் பதிவுசெய்து, இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீஸார் இ-பாஸை சோதனை செய்வர்.
அதில் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்த பின்னரே, சுற்றுலாப் பயணிகள் நீலகிரி எல்லைக்குள் அனுமதிக்கப்படுவர். நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களை வைத்துள்ள சுற்றுலா கார் ஓட்டுநர்கள், வழக்கம்போல வந்து செல்லலாம். அதேபோல, அரசுப் பேருந்துகளில் வரும் சுற்றுலாப் பயணிகள் எப்போதும்போல வந்து செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திண்டுக்கல் ஆட்சியர் உத்தரவு: இதேபோல, திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி கூறியதாவது: கொடைக்கானல் வரும் வெளி மாநில, வெளி மாவட்ட வாகனங்கள் நாளை முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் பதிவு செய்து வர வேண்டும். இ-பாஸ் காலஅவகாசம் உள்ளிட்ட விவரங்களை க்யூஆர் கோடு மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அவர்களது செல்போன் எண் வாயிலாகவும், வெளிநாடுகளில் இருந்து வருவோர் அவர்களது இ-மெயில் முகவரி வாயிலாகவும் அடிப்படை விவரங்களைச் சமர்ப்பித்து இ-பாஸ் பெறலாம். அரசுப் பேருந்துகளில் பயணிப்போர் இ-பாஸ் பெற வேண்டியதில்லை.
இ-பாஸ் 3 வகையான அடையாள கோடுகளுடன் வழங்கப்பட உள்ளது. உள்ளூர் மக்களுக்கு பச்சை நிறமும், வேளாண் விளை பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், சரக்கு வாகனங்களுக்கு நீல நிறமும், சுற்றுலா, வர்த்தக ரீதியான வாகனங்களுக்கு ஊதா நிற அடையாளக் கோடுடனும் இ-பாஸ் வழங்கப்படும். உள்ளூர் வாகனங்கள் ஒருமுறை மட்டுமே விண்ணப்பித்து உள்ளூர் இ-பாஸ் பெற்றுக் கொண்டால் போதும்.
கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களும் வெள்ளிநீர்வீழ்ச்சி அருகில் உள்ள சுங்கச்சாவடியில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படும். இதற்காக epass.tnega.org என்ற இணைய முகவரி மூலம் இன்று காலை முதல் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT