Published : 05 May 2024 04:06 AM
Last Updated : 05 May 2024 04:06 AM
தருமபுரி: தருமபுரி மாவட்ட சுற்றுலா தலமான ஒகேனக்கல் காவிரியாறு வறண்டதால் சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் காவிரியாற்றங்கரையில் அமைந்துள்ள சுற்றுலா தலம் ஒகேனக்கல். அதிக வெள்ளப் பெருக்கு காலமான ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் இங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும். இதர மாதங்களில் ஒகேனக்கலுக்கு தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். காவிரியாற்றில் பரிசல் பயணம் செல்வது, எண்ணெய் மசாஜ், அருவிக் குளியல், மீன் குழம்புடன் கூடிய உணவு ஆகியவை ஒகேனக்கல்லில் முக்கிய அம்சங்கள்.
இவற்றை விரும்பி ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் இங்குள்ள தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக, கோடை விடுமுறை காலங்களில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். ஆனால், நடப்பு ஆண்டில் ஒகேனக்கல் காவிரியாறு முழுமையாக வறண்டுள்ளது. பிரதான அருவியில் சிறிதளவே தண்ணீர் வழிகிறது. வெள்ளம் ஆர்ப்பரிக்கும் பிரதான அருவிப் பகுதி பாறைகளாக காட்சியளிக்கிறது.
வறட்சியை காரணம் காட்டி, கர்நாடகா மாநில அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை அம்மாநில அரசு வழங்க மறுத்து வருகிறது. இதனால், கோடை விடுமுறை தொடங்கிவிட்ட நிலையிலும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே உள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் சுற்றுலாவை நம்பியுள்ள பரிசல் ஓட்டுநர்கள், மீன் வியாபாரிகள், மீன் உணவு சமைக்கும் பெண்கள், மசாஜ் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலக்கம் அடைந்துள்ளனர்.
இது குறித்து, தொழிலாளர்கள் சிலர் கூறும்போது, ‘வழக்கமாக கோடை விடுமுறை தொடக்கத்திலேயே சுற்றுலாப் பயணிகள் வருகை தொடங்கி விடும். விடுமுறை முடிய ஓரிரு வாரங்கள் இருக்கும் போது அதிக அளவிலான பயணிகள் வருகை தருவர். இதர மாதங்களில் எங்களுக்கு சொற்ப வருவாய் மட்டுமே கிடைக்கும். கோடை சுற்றுலாவின் போது தான் ஓரளவு நிறைவான வருவாய் ஈட்டுவோம். சுற்றுலாப் பயணிகளை நம்பியிருக்கும் எங்களைப் போன்ற தொழிலாளர்களுக்கு நடப்பு ஆண்டு கோடை வருவாய் பெரிதாக பாதிக்கப்படும்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT