Published : 03 May 2024 02:56 PM
Last Updated : 03 May 2024 02:56 PM
உதகை: உதகை மலர் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சி வரும் 10-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடக்கிறது.
இந்த ஆண்டு சிறப்பம்சமாக 35,000 மலர்த்தொட்டிகள் ஜெரேனியம், பால்சம், லிசியான்தஸ், சால்வியா, டெய்சி, சைக்லமன் மற்றும் பல புதிய இரக ஆர்னமென்டல்கேல், ஒரியண்டல்லில்லி, ஆசியாடிக்லில்லி, டேலியாக்கள் மற்றும் இன்காமேரிகோல்டு, பிகோனியா, கேன்டிடப்ட், பிரன்ச்மேரிகோல்டு, பேன்சி, பெட்டுனியா, பிளாக்ஸ், ஜினியா, ஸ்டாக், வெர்பினா, சூரியகாந்தி, சிலோசியா, ஆன்டிரைனம், டயான்தஸ், ஆஸ்டர் பலவகையான கிரைசாந்திமம் ஹெலிகோனியா, ஆர்கிட், ஆந்தூழியம் போன்ற 75 இனங்களில் 388 வகையான ரகங்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு விருந்தாக அடுக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பூங்காவில் நடவு செய்யப்பட்டூள்ள 6.5 லட்சம் மலர் நாற்றுகளும் மலர்ந்து அழகாக காட்சியளிக்கிறது. இவ்வாண்டு மலர்க்காட்சிக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புதுப்பூங்காவில் சுமார் 10,000 பல வகையான வண்ண மலர்த்தொட்டி அலங்காரங்கள் காண்போருக்கு குளிர்ச்சி தரும் வகையில் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாண்டு சிறப்பம்சமாக மலர்க்காட்சி நடக்கும் நாட்களில் லேசர் லைட் ஷோ காட்சிப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல உதகை ரோஜா பூங்காவில் 19வது ரோஜா காட்சி 10ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடக்கிறது இதற்காக பூங்கா முழுவீச்சில் தயாராகி வருகிறது.
கட்டண உயர்வால் கடும் அதிருப்தி: இந்நிலையில் மலர் கண்காட்சியையொட்டி, உதகை தாவரவியல் பூங்காவில் நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மலர்கண்காட்சிக்கான நுழைவுக்கட்டணம் ரூ.150 ஆக உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு ரூ.75 வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ரோஜா காட்சி மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடக்கும் பழ கண்காட்சிக்காக பெரியவர்களுக்கு ரூ.100, சிறுவர்களுக்கு ரூ.50 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மலர் கண்காட்சி நடைபெறும் 11 நாட்கள் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுற்றுலா பயணிகள் கூறும் போது, “கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் ரூ.150 வசூலிப்பது அதிகமாகும். கண்காட்சிகளுக்காக தனியாக கட்டணம் உயர்த்தப்படுவது அநியாயம். உயர்த்தப்பட்ட நுழைவு கட்டண தொகையை குறைக்க வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT