Published : 27 Apr 2024 06:15 AM
Last Updated : 27 Apr 2024 06:15 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் 4 மாதங்களுக்குப்பின் மணிமுத்தாறு அருவியில் குளிக்க நேற்றுமுதல் அனுமதி அளிக்கப்பட்டது. இதை யடுத்து சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க சுற்றுலா பயணிகள் அருவிக்கு சென்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
திருநெல்வேலி மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் செல்லும் வழியில் முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் மணி முத்தாறு அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் குளிக்க திருநெல்வேலி மட்டுமின்றி தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
ஆண்டு முழுவதும் இங்கு ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுவதால் எப்போதும் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை இருக்கும். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் பெய்த கன மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தில் அருவிப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கட்டமைப்பு கள் சேதமடைந்தன. தடுப்பு கம்பிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் மணிமுத்தாறு அருவி மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
குற்றால அருவிகளின் நீர்வரத்து இல்லாததால் மணிமுத்தாறு அருவிக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதை தொடர்ந்து மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. பணிகள் நிறை வடைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை நேற்று முதல் அனுமதி வழங்கியது.
4 மாதங்களுக்குப்பின் மணிமுத் தாறு அருவி திறக்கப்பட்டதை அடுத்து நேற்று ஏராளமானோர் அருவிக்கு சென்று குளித்தனர். தற்போது கோடை விடுமுறை காலத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால் உடல் வெப்பத்தை தணிக்க நீர்நிலைகளைத் தேடி பொதுமக்கள் செல்கின்றனர்.
மணிமுத்தாறு அருவிக்கும் ஏராளமானோர் குளிக்க வருகின்றனர். தினமும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT