Published : 10 Mar 2024 07:48 PM
Last Updated : 10 Mar 2024 07:48 PM
கொடைக்கானல்: 'மஞ்சும்மல் பாய்ஸ்' படம் பார்த்துவிட்டு கொடைக்கானலுக்கு அதிகம் வரும் சுற்றுலாப் பயணிகளால் மற்ற சுற்றுலாத் தலங்களை விட குணா குகை வசூலில் வாரிக் குவித்துவருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோடை வாசஸ்தலமாக இருந்தபோதும் கோடை காலத்தில் மட்டுமின்றி ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வருகை உள்ளது. இருந்தபோதும் கோடை காலத்தில் கொடைக்கானலே திணறும் வகையில் சுற்றுலாப் பயணிகள் குவியும் நிகழ்வு ஆண்டுதோறும் நடக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வாகனங்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் கேரள திரைப்படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படம் கடந்த பிப்ரவரி இறுதிவாரத்தில் வெளியாகியது.
தமிழகத்தில் வெளியான சில தினங்களிலேயே படத்தின் விமர்சனம் மக்களிடம் பரவ அதிக தியேட்டர்களில் இந்த படம் தற்போது திரையிடப்பட்டு மக்களின் ஆதரவை பெற்றுவருகிறது. 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படத்தை பார்த்தவர்கள் ஒரு முறையாவது கொடைக்கானலில் உள்ள குணா குகை பகுதியை பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தால் மார்ச் துவக்கம் முதல் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும் அதிகம் பேர் இந்த படத்தை பார்த்துவிட்டு குணா குகையை காண வந்துசெல்கின்றனர்.
வனத்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், ''வனத்துறை செக்போஸ்ட்டில் வாகனம் நுழையும்போதே, ''குணா குகை எங்கு உள்ளது'' என கேட்டுவிட்டு தான் செல்கின்றனர். கடந்த ஒருவாரத்தில் அதிகம் பேருக்கு இந்த கேள்விக்கான பதிலை சொல்லிவிட்டேன்'' என்கிறார். மற்ற சுற்றுலாத் தலங்களை காண ஆர்வம் காட்டுவதை விட குணா குகையை காண ஆர்வம் காட்டுவதால் குணா குகைக்கு வருமானமும் அதிகரித்துள்ளது.
வனத்துறை சார்பில் குணா குகை பகுதிக்கு செல்ல ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. டிக்கெட்டின் அடிப்படையில் மார்ச் 1 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை குணாகுகைக்கு 46 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் வசூலாகியுள்ளது. பிற சுற்றுலாத் தலங்களின் கட்டண வசூலை விட குணா குகை யில் வனத்துறைக்கு அதிக வசூல் ஆகியுள்ளது. 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படம் வசூலில் வாரிக் குவித்து வருவது போல் 'குணா குகை' பகுதியும் வசூலில் வாரிகுவித்துவருகிறது.
கொடைக்கானல் குணா குகைக்கு வந்த ரியல் (மஞ்சும்மல்)பாய்ஸ்: கேரள திரைப்படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டது. தற்போது கேரளா மட்டுமின்றி, தமிழகத்திலும் இந்த உண்மை சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் உண்மையிலேயே குணா குகைக்கு வந்து குகைக்குள் விழுந்த நண்பனை துணிந்து காப்பாற்றிய கேரள நண்பர்கள் குழுவினர் இன்று கொடைக்கானல் வந்தனர்.
இவர்கள் கடந்த 2006ம் ஆண்டு கொடைக்கானல் சுற்றுலா வந்தபோது நடந்த சம்பவம் தான் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அப்போது கேரளாவைச் சேர்ந்த 10 இளைஞர்கள் சுற்றுலா வந்துள்ளனர். இதில் சுபாஷ் என்பவர் குணா குகை பள்ளத்தாக்கில் தவறி விழுந்துள்ளார். அவருடன் வந்திருந்த குட்டன் என்பவர் பள்ளத்தில் விழுந்த தனது நண்பனை பிறர் உதவியுடன் உள்ளே இறங்கி கயிறு கட்டி அவரை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கொடைக்கானல் வந்த குழுவினர் குணா குகைக்கு நேரில் சென்று அவர்களின் அப்போதைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இவர்கள் பற்றி அறிந்த சுற்றுலாப் பயணிகள் உண்மையான நிகழ்வில் தொடர்புடைய குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT