Published : 08 Mar 2024 06:20 AM
Last Updated : 08 Mar 2024 06:20 AM

விவசாயிகள் எதிர்ப்பால் கொடைக்கானலில் சாகச சுற்றுலா திட்டத்தை கைவிட்ட சுற்றுலா துறை

கொடைக்கானல் ஏரியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள அலங்கார தடுப்பு வேலி. | படம்: ஆ.நல்லசிவன் |

கொடைக்கானல்: கொடைக்கானலில் விவசாயிகள் எதிர்ப்பால் சாகச சுற்றுலா அமைக்கும் திட்டத்தை சுற்றுலாத் துறை கைவிட்டது. கொடைக்கானலில் சுற்றுலாவை மேம்படுத்தவும், இங்கு வரும் பயணிகளை கவரவும் மேல்மலை கிராமமான மன்னவனூரை அடுத்துள்ள கவுஞ்சியில் ரூ.1.75 கோடியில் சாகச சுற்றுலாத்தலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கவுஞ்சியில் 5 ஏக்கரில் சாகச சுற்றுலா தலம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன.

மேல்மலை கிராமமான மன்னவனூர், கவுஞ்சி உள்ளிட்ட பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பசுமையான புல்வெளிகள் உள்ளன. விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு புல்வெளிகள் மேய்ச்சலுக்கு பயன்படுகின்றன.

புல்வெளிகள் நிறைந்த பகுதியில் அந்நிய மரங்கள் வளர்ந்துள்ளதால் புல்வெளிகள் அழியும் நிலையில் உள்ளது. ஏற்கெனவே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் ரூ.8 கோடியில் மீன் விதை பண்ணை அமைக்கும் திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த திட்டத்துக்கு நீதிமன்றமும் தடை விதித்தது. மேலும் இங்கு வணிக நோக்கில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கூடாது என அறிவுறுத்தியது.

நீதிமன்ற உத்தரவை மீறி, சாகச சுற்றுலா திட்டத்துக்காக புல்வெளிகள் அழிக்கப்பட்டால் இயற்கை வளம் பாதிப்பதோடு, கால்நடை தீவனத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.

அதனால் இத்திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது சாகச சுற்றுலா திட்டத்தை சுற்றுலாத் துறை கைவிட்டுள்ளது. மேலும் இத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ.1.75 கோடியை திரும்ப அனுப்பவும் முடிவு செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x