Published : 07 Mar 2024 03:21 PM
Last Updated : 07 Mar 2024 03:21 PM
மேட்டுப்பாளையம்: பழமையான கல்லாறு அரசு பழப் பண்ணைக்குள் சுற்றுலா பயணிகள் வருகை தர தோட்டக்கலைத் துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லாறு என்னுமிடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அரசு கல்லாறு பழப்பண்ணை அமைந்துள்ளது. நீலகிரி மலையடிவாரத்தில் நீர்வளமும், மண்வளமும் மிகுத்த இப்பகுதியில் கடந்த 1900-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இப்பழப் பண்ணை தொடங்கப்பட்டது. சுமார் இருபது ஏக்கர் பரப்பளவில் அரசின் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பழப்பண்ணை இது.
இதில் ஆண்டு முழுவதும் ஒரே சீதோஷின நிலை நிலவுவதால், உலகில் மிக சில இடங்களில் மட்டுமே அரிதாக விளையக்கூடிய மருத்துவ குணம் மிக்க துரியன், மங்குஸ்தான், ரம்புட்டான், வாட்டர் ஆப்பிள், வெண்ணைப்பழம், லிட்சி, மலேயன் ஆப்பிள், சிங்கபூர் பலா என ஏராளமான பழ வகை மரங்கள் இங்கு வளர்கின்றன. மேலும், 300-க்கும் மேற்பட்ட சில்க் காட்டன் ட்ரீ என்றழைக்கபடும் இலவம்பஞ்சு மரங்கள், காணவும் கிடைக்கவும் அரிதான மலர்களும், மூலிகைகளும் இயற்கையின் பொக்கிஷங்களாக இங்கு கொட்டிக் கிடக்கின்றன.
இப்பண்ணையில் சீசனுக்கு ஏற்ற வகையில் விளையும் அரிய வகை பழங்கள் விற்பனை, மர மற்றும் மலர் நாற்றுக்கள் விற்பனை, பழச்சாறு மற்றும் ஜாம் விற்பனை, குழந்தைகள் விளையாட சிறிய அளவில் பூங்கா என பல்வேறு வசதிகள் உள்ளதால் விடுமறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்தே காணப்படும்.
இந்நிலையில், யானைகளின் வழித்தட பாதையில் உள்ள குறுக்கீடுகள் குறித்து கண்டிப்பான நடவடிக்கை எடுத்து வரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி யானை வலசைப்பாதையில் உள்ள 123 ஆண்டுகள் பழமையும் பெருமையும் கொண்ட கல்லாறு பழப் பண்ணையை வனத் துறையினரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக தற்போது கல்லாறு பழப்பண்ணைக்குள் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை விதித்து அதற்கான அறிவிப்பு தோட்டக்கலைத்துறையால் நேற்று (மார்ச் 6) முதல் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் வழக்கம் போல் அரசு பழப் பண்ணைக்கு வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர். இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ''சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தற்போது பொதுமக்கள் உள்ளே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மர நாற்றுக்கள் உற்பத்தி, விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் விற்பனை வழக்கம்போல் நடைபெறும்'' என்றார்.
மேட்டுப்பாளையம் பகுதியின் ஒரு அடையாளமாக 123 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க ஒரு பண்ணை முடக்கப்படுவது கவலை தரக்கூடியதாகவே சுற்றுலாப் பயணிகளால் பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT