Published : 12 Feb 2024 04:02 AM
Last Updated : 12 Feb 2024 04:02 AM

நீர் வரத்து குறைவால் ஏமாற்றம் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையில் விடுமுறை தினமான நேற்று குறைந்த அளவிலேயே சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்யும் மழையைப் பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இருக்கும். அதிகளவு நீர் ஓடும் போது அருவியில் குளித்து மகிழவும், ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வருவர். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து செல்வர். தற்போது, காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் போதிய மழையில்லாததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக காவிரியாற்றில் நீர் வரத்து விநாடிக்கு 300 கன அடியாக குறைந்துள்ளது. இதனால், ஆற்றில் மூழ்கி கிடந்த பாறைகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. பல்வேறு இடங்களில் பரந்து விரிந்த காவிரி ஆறு நீரின்றி கருங்கல் பாறைகளாக காட்சியளிக்கிறது. ஒகேனக்கல் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

கோடை காலம் என்பதாலும், கர்நாடகாவில் மழை குறைந்ததாலும் நீரின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. நீர்வரத்து மேலும் குறைந்தால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிக்கான தண்ணீர் எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு குடிநீர் விநியோகம் பாதிக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது.

வந்திருந்த பயணிகளும் அருவி மற்றும் ஆற்றில் தண்ணீர் குறைந்திருப்பதைக் கண்டு ஏமாற்றம் அடைந்தனா். இதே நிலை தொடர்ந்தால் கோடை சுற்றுலா இந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்படும் என பரிசல் ஓட்டிகள், உணவு சமைப்பவர்கள், மசாஜ் தொழிலாளர்கள் உள்ளிட்ட சுற்றுலா தொழிலை நம்பி உள்ளவர்கள் கவலை தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x