Published : 17 Jan 2024 09:24 PM
Last Updated : 17 Jan 2024 09:24 PM
மதுரை: ‘‘ஜல்லிக்கட்டு போன்ற ஒரு வீர விளையாட்டை உலகில் வேறு எந்த நாட்டிலிலும் நாங்கள் பார்த்ததில்லை, ’’ என்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்க்க வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வியந்தனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பார்க்க வருவதாலே இந்த போட்டி உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு என்று கூறப்படுகிறது. இன்று நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண, அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு வெளிநாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்து புகைப்படங்களும், வீடியோவும் எடுத்து மகிழ்ந்தனர். போட்டியை பார்த்துவிட்டு, அலங்காநல்லூர் கிராமத்தை ஒவ்வொரு தெருவாக சென்று சுற்றிப்பார்த்து, இந்த கிராமத்தின் பாரம்பரியத்தையும், ஜல்லிக்கட்டு போட்டியின் வரலாற்றையும் தங்கள் சுற்றுலா வழிகாட்டிகள் துணையுடன் கிராம மக்களிடம் பேசி தெரிந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டு பார்க்க வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பேட்ரிக் கூறுகையில், ‘‘பொங்கல் பண்டிகை நாட்களில் மதுரைக்கு ஜல்லிக்கட்டு பார்க்க வருவதை வழக்கமாக கொண்டுள்ளேன். எத்தனைமுறை இந்த போட்டியையும், இந்த ஊரையும் பார்க்க பார்க்க, மீண்டும் மீண்டும் வர வேண்டும் ஆவலைத் தூண்டுகிறது. தற்போது 9-வது முறையாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்துள்ளேன். ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டை உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நாங்கள் பார்த்தில்லை. உயிரை பனையம் வைத்து, காளையை அடக்கும் இந்த போட்டியை நிச்சயமாக மெய்சிலிக்க வைக்கிறது. ஆச்சிரியமாகவும் இருக்கிறது, ’’ என்றார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த மைக்கேல், மிட்சல் தம்பதியினர் கூறுயைில், ‘‘பார்க்கவே ரொம்ப த்ரில்லாக உள்ளது. காளைகள் பார்க்க அழகாகவும், அதேநேரத்தில் அவிழ்த்துவிட்டதும் ஆக்ரோஷமாகவும் மாறிவிடுகின்றன.
தடகளப் போட்டிகளில் யார் வெற்றிப்பெறுவார்கள் என்பது அந்த போட்டி தொடங்கியது முதல் முடியும் வரை விறுவிறுப்பாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கும். அதுபோல், ஜல்லிக்கட்டு போட்டியில் ஒவ்வொரு முறையும் காளை வரும்போது அது அடக்கப்படுமா? அடக்கப்படாதா? என்ற எதிர்பார்ப்பும், சுவாரசியமும் உள்ளது. வீரத்துக்கு எடுத்துக்காட்டாக நடக்கும் இந்தப் போட்டி நிச்சியமாக பாராட்டப்பட வேண்டியது, தமிழர்களை பெருமையாக கருதுகிறோம்’’ என்றனர்.
முன்னதாக, இன்று நடந்த உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் முதலிடம் பிடித்து காரை பரிசாக வென்றார். இந்தப் போட்டியில் 83 பேர் காயமடைந்த நிலையில், 11 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முழுமையாக வாசிக்க > 18 காளைகளை அடக்கிய கார்த்திக்கு கார் பரிசு, காயம் 83 பேர்... - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT