Published : 14 Jan 2024 07:04 AM
Last Updated : 14 Jan 2024 07:04 AM

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா தொடக்கம் : ராட்சத பலூன்களால் பார்வையாளர்கள் உற்சாகம்

பொள்ளாச்சியில் நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழாவில் பல்வேறு வடிவங்களில் வானில் பறந்த வண்ண பலூன்கள். படங்கள்: ஜெ.மனோகரன்

பொள்ளாச்சி: பொள்ளச்சியில் நேற்று தொடங்கிய சர்வதேச பலூன் திருவிழாவில், வானில் பறந்த ராட்சத வண்ண பலூன்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்தின.

கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

9-வது ஆண்டாக நடைபெறும் பலூன் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடந்தது. இங்கிலாந்து, பிரான்ஸ்,நெதர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, பல்வேறு விதமான பலூன்கள் கொண்டு வரப்பட்டன.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இலச்சினை (லோகோ) பொறிக்கப்பட்ட பலூன், வாத்து, யானை, தவளை உள்ளிட்ட வடிவங்களில் அமைக்கப்பட்ட பலூன்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

தவளை வடிவ பலூன் முன்பு செல்ஃபி எடுத்துக்கொண்ட இளம்பெண்கள்.

இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறும்போது, "தரையில் இருந்து 500 அடி முதல் 1,000 அடி உயரம் வரை, காற்று வீசும் திசையில் 30 நிமிடம் பலூன்கள் பறக்கும். வரும் 16-ம் தேதி வரை மாலையில் பலூன் திருவிழா நடைபெறும். மேலும், நிகழ்ச்சி திடலில் 80 அடி உயரத்தில் 10 நிமிடங்கள் பலூன்கள் நிலைநிறுத்தப்படும். அங்கிருந்து பொள்ளாச்சி நகரின் அழகை ரசிக்கலாம். பலூன் திருவிழாவைக் காண கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் பொள்ளாச்சிக்கு வந்துள்ளனர்.

மேலும், காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஹெலிகாப்டர் சவாரி நடத்தப்படுகிறது. வரும் 14-ம் தேதி மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. போட்டியில் வெல்பவருக்கு பலூனில் பறக்க வாய்ப்பு வழங்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x