Published : 12 Jan 2024 05:05 PM
Last Updated : 12 Jan 2024 05:05 PM
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே 3 மாவட்டங்களின் எல்லையில் உள்ள அனுமன்தீா்த்தத்தை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள்னார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம் காட்டேரி ஊராட்சிக்கு உட்பட்ட அனுமன்தீர்த்தம் கிராமம் சேலம்-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ளது.
குறிப்பாக, இக்கிராமம் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களின் எல்லையில் உள்ளது. மேலும், இங்கு பிரசித்தி பெற்ற அனுமந்தீசுவரர் கோயில் உள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 3 மாவட்டத்திலிருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்து தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி சுவாமியைத் தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்நிலையில், அனுமன்தீர்த்தத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது: அனுமன்தீர்த்தம் கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுணர்மி, அனுமன் ஜெயந்தி, மகாளய அமாவாசை நாட்களில் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும். ஆனால், இங்கு பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் நிறைவாக இல்லை.
எனவே, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதோடு, சுகாதார வளாகங்கள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பூங்காக்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
மேலும், கோடைக் காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் நீரின்றி வறண்டு விடுவதால், பக்தர்கள் புனித நீராட முடியாத நிலை ஏற்படுகிறது. இதை தடுக்க சிறிய தடுப்பணை கட்டி தண்ணீர் சேமிக்க வேண்டும்.
இதன் மூலம் புதூர்புங்கனை, மூங்கிலேரி, பாவக்கல், சட்டையம்பட்டி ஆகிய ஊராட்சி விவசாயிகளும் பயன் பெறுவார்கள்.விடுமுறை, விசேஷ நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்வதால், இப்பகுதியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT