Published : 08 Jan 2024 07:11 PM
Last Updated : 08 Jan 2024 07:11 PM
கடலூர்: சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வந்தது. இதனால் 4 மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு எளிதில் செல்ல முடியும். 3 மாவட்டங்களின் பொருளாதாரம் வளர்ச்சியடையும். சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை (NH 81) கடந்த 2019-ம் ஆண்டு சுமார் ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தொடங்கப்பட்டது. 167 கிலோமீட்டர் கொண்ட இந்த சாலை, தேசிய நெடுஞ்சாலையாக மாற் றப்பட்ட பிறகு 134 கிலோமீட்டராக தற்போது உள்ளது.
இந்த நெடுஞ்சாலையால் திருச்சி, அரியலூர், கடலூர் மாவட்டங்கள் இணைக்கப்படுகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலை 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது. முதலில் திருச்சியில் இருந்து கல்லாகம் வரையிலும், கல்லாகத்தில் இருந்து மீன்சுருட்டி வரையிலும், மீன்சுருட்டியில் இருந்து சிதம்பரம் வரை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று முடிக்கப்பட்டது.
இந்த நெடுஞ்சாலையில் கல்லக்குடி, உடையார்பாளையம் அருகே மணகெதி மற்றும் காட்டுமன்னார்கோவில் ஆகிய 3 இடங்களில் டோல்கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி யில் இருந்து முதல் 50 கிலோமீட்டர் தூரம் நான்கு வழி சாலையாகவும், அடுத்த இரண்டு பிரிவுகளும், இருவழி சாலைகளாகவும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலை வழியாக அரியலூர் மாவட் டத்தில் உற்பத்தி செய்யப்படும் சிமென்ட் மிக எளிதாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றடையும். இதனால் அரியலூர் மாவட்டம் பொருளாதார ரீதியாக மாற்றம் அடையும்.
மேலும் கடலூர், தஞ்சை, அரியலூர், திருச்சி போன்ற பகுதியில் உள்ள சுற்றுலா தலங்கள் செல்வதற்கும் சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோயில், வீராணம் ஏரி, சோழர்கள் தலைநகரமான கங்கைகொண்ட சோழபுரம், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகிய மிக முக்கிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு எளிதில் சென்று வர பொதுமக்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
சோழர் காலத்தில் கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக அறிவிக்கப்பட்ட பிறகு பூம்புகாரில் இருந்து கொச்சி வரை ராஜகேசரி பெருவழி என அழைக்கப்பட்டது. இந்த சாலை வழியாக கடந்த காலங்களிலும் பொதுமக்கள் பயன்பாட்டின்போது வரி வசூல் செய்யப்பட்டதாக இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த பெரு வழியாக பல்வேறு பகுதிகளுக்கு போக்குவரத்து நடைபெற்றுள்ளது. சிறப்பு மிக்க இந்த சாலையில் தற்போது (NH-81) பணிகள் நடைபெற்றன. இதன்மூலம் பல மாவட்ட மக்களும் பெரிதும் பயன்பெறுவர்.
இதுமட்டுமின்றி தொழிற்சாலை வசதி மேம்படும். சரக்கு வாகன போக்குவரத்து எளிதில் சென்றடையும். இந்த சாலை வழியாக 4 மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு எளிதில் செல்ல முடியும். 3 மாவட்ட பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்பதில் ஐயமில்லை.
இந்த தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் முடிவடைந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக ஜன. 2-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப் பணித்தார். திருச்சியில் இருந்து முதல் 50 கிலோமீட்டர் தூரம் நான்கு வழி சாலையாகவும், அடுத்த இரண்டு பிரிவுகளும், இருவழி சாலைகளாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT