Last Updated : 01 Jan, 2024 07:40 PM

 

Published : 01 Jan 2024 07:40 PM
Last Updated : 01 Jan 2024 07:40 PM

கூடலூர் திராட்சைத் தோட்டத்தில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம் @ புத்தாண்டு

ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கூடலூர் திராட்சை தோட்ட மையத்துக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள். | படங்கள்: என்.கணேஷ்ராஜ்

கூடலூர்: ஆங்கிலப் புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு கூடலூர் அருகே உள்ள திராட்சை தோட்ட சுற்றுலா மையத்துக்கு பார்வையாளர்கள் இன்று அதிகளவில் வந்திருந்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் கூடலூர் இடையே அப்பாச்சிபண்ணை எனும் இடத்தில் திராட்சை தோட்ட சுற்றுலா மையம் உள்ளது. இங்குள்ள திராட்சை தோட்டங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். காய்த்து தொங்கும் திராட்சை கொத்துக்களை பார்த்து ரசிப்பதுடன் புகைப்படமும் எடுத்துக் கொள்ளலாம். இங்கு சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்கவும், அமர்ந்து புகைப்படம் எடுக்கவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. கொடியில் உள்ள திராட்சைகளை பறித்து அங்கேயே பழச்சாறு தயாரித்தும் விற்பனை செய்யப்படுகிறது.

குழந்தைகளுக்கு இலவசமாக திராட்சைகள் வழங்கப்படுகின்றன. இதனால் இங்கு சமீப காலமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பறவைகள், பாம்புகள் கண்காட்சி, கேளிக்கை விளையாட்டுக்கள் உள்ளிட்ட வசதிகளும் விரிவுபடுத்தப்பட்டன. மேலும் இப்பகுதியைச் சுற்றி ஏராளமான சுற்றுலா வர்த்தக கடைகளும் அதிகரித்து விட்டன.

கூடலூர் திராட்சை தோட்ட மையத்தில் திராட்சை கொத்துக்களின் பின்னணியில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள். | படம்:என்.கணேஷ்ராஜ்.

இதனால் தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையமாக மாறி உள்ளது. இப்பகுதியைக் கடந்து செல்லும் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் இங்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். ஆங்கிலப் புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்திருந்தனர். குடும்பத்துடன் வந்த இவர்கள் திராட்சை கொத்துக்களை பார்த்து ரசித்ததுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். தொடர் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட இங்கு கூட்டம் அதிகம் இருந்தது.

இதுகுறித்து இப்பகுதி வியாபாரிகள் கூறுகையில், ''தமிழர்கள் கேரளாவில் உள்ள சுற்றுலாப் பகுதிளுக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.



அதே வேளையில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் திராட்சை தோட்டம், சுருளி, கும்பக்கரை அருவிகள் உள்ளிட்ட தமிழக சுற்றுலாப் பகுதியை பார்க்க பிரியப்படுகின்றனர். புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான கேரள சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்தனர். இதனால் இப்பகுதி சுற்றுலா வர்த்தகமும் களைகட்டியது'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x