Published : 27 Dec 2023 04:06 AM
Last Updated : 27 Dec 2023 04:06 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பலரும் கட்டணம் செலுத்தி இரவு நேர கொண்டாட்டத்தில் பங்கேற்க முன்பதிவு செய்து வருகின்றனர்.
ஹோட்டல்கள், விடுதிகளில் அறைகள் நிரம்பியுள்ளன. அரசு சார்பிலும், தனியார் ஹோட்டல்கள், தனி நபர்கள் சார்பிலும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புத்தாண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் கிழக்கு எஸ்பி சுவாதி சிங் தலைமையில் நடந்தது.
அதன் பின்னர் வெளியிட்ட உத்தரவில், “அரசின் அனுமதி பெற்ற இடத்தில் மட்டுமே கொண்டாட்டங்கள் நடத்த வேண்டும். சாலைகள், பொது இடங்களில் அனுமதியில்லை. புத்தாண்டு கொண்டாட்டத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாத வகையில்ஏற்பாட்டாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தீ தடுப்பு சாதனங்கள், டாக்டருடன் கூடிய ஆம்புலன்ஸ் வசதி, காப்பீடு வசதி செய்துதர வேண்டும்.
அன்லிமிடெட் உணவு என கூறிவிட்டு குறைந்த உணவுகளை வழங்கக் கூடாது. விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இரவு 12 மணிக்கு மேல் மதுபான விருந்துக்கு அனுமதியில்லை. அதிகாலை 1 மணிக்கு மேல் நிகழ்ச்சி நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, “புத்தாண்டை முன்னிட்டுபுதுச்சேரியில் பலத்த பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடம் உட்படபல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதேநேரத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைக்கும் விதமாக எந்தவித செயலிலும் ஈடுபட வேண்டாம்” என்று குறிப்பிட்டார்.
படகு குழாமில் ரூ.27 லட்சம் வசூல்: சனி, ஞாயிறு, கிறிஸ்துமஸ் என 3 நாட்கள் தொடர் விடுமுறையால் புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நோணாங்குப்பம் படகு குழாமில் பல மணி நேரம் காத்திருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படகு சவாரி செய்தனர். இதன்மூலம் கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.27 லட்சம் படகு குழாமில் வசூலானது.
புத்தாண்டு வரை படகு குழாமில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வந்துகொண்டிருப்பதால் நகரெங்கும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு ஏற்பாடு: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் நிர்வாக பொறுப்பு அதிகாரி பழனியப்பன் கூறுகையில், “புதுச்சேரி மணக் குள விநாயகர் கோயிலில் 1-ம் தேதி காலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடக்கிறது. பின்னர் தங்க கவசத்தில் விநாயகர் காட்சியளிக்கிறார். பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும்.
வரிசையில் நிற்கும் பக்தர்கள் கோயில் உட்புறத்தில் நடக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் பார்ப்பதற்காக டிவி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. புத்தாண்டு அன்று அர்ச்சனை செய்யப்படுவதில்லை. பக்தர்களுக்காக காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடை திறந்திருக்கும். 3.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு, இரவு 10.30 மணி வரை திறந்திருக்கும்” என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT