Published : 22 Dec 2023 05:21 AM
Last Updated : 22 Dec 2023 05:21 AM
சென்னை: தென்னிந்திய சுற்றுலா பயணத் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர் என அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகுக் குழாம்கள், சுற்றுலா பயணத் திட்டங்கள் குறித்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் சுற்றுலாத் துறை அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசியதாவது: திருப்பதி சுற்றுலா, அறுபடை வீடு, பிற மாநிலத்தவர்கள் விரும்பிச் செல்லும் 8 நாட்கள் தமிழ்நாடு சுற்றுலா உள்ளிட்ட சில சுற்றுலாக்கள் மக்கள் அதிகம் சென்று வந்த நிலையில், தற்போது இந்த மாதம் (டிசம்பர்) அதிக நாட்கள் பயணம் மேற்கொள்ளும் தென்னிந்திய சுற்றுலாவுக்கு, சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர்.
அந்த வகையில், 8 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் கோவா – மந்த்ராலயம், 7 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் மூகாம்பிகா சுற்றுலா பயணத் திட்டங்களின் கீழ் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா செல்ல பதிவு செய்து வருகின்றார்கள். இந்த சுற்றுலா பயணத் திட்டங்களில், கடந்த 5 ஆண்டுகளாகப் பொதுமக்கள் ஆர்வம் காட்டாமல், முன்பதிவு செய்யாததால், சுற்றுலா இயக்கப்படாத நிலை இருந்தது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் மீண்டும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இந்த சுற்றுலா பயணத் திட்டங்களின் கீழ் சுற்றுலா மேற்கொண்டிருப்பது, தமிழ்நாட்டின் சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் கொண்டு வருவதைக் காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் சுற்றுலாத் துறை செயலாளர் க.மணிவாசன், இயக்குநர் காகர்லா உஷா, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுமேலாளர் இ.கமலா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT