Published : 22 Dec 2023 04:08 AM
Last Updated : 22 Dec 2023 04:08 AM
புதுச்சேரி: புத்தாண்டுக்கு, புதுச்சேரியில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரவாய்ப்புள்ளது. பெரும்பாலான ஹோட்டல் அறைகளின் முன்பதிவு நிறைவடைந்து விட்டது. கரோனாவையொட்டி மத்திய அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறை பின்பற்றப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் புத்தாண்டுக்காக சுற்றுலாத்துறை சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. கடற்கரைச் சாலைமுழுக்க அலங்கரிக்கப்படும். புத்தாண்டு கலை நிகழ்வுகள் பிடிடிசி, சுற்றுலாத்துறை மூலம் நடக்கிறது. இங்கு டிஜே மற்றும் இசை நிகழ்வு உள்ளிட்டவை இலவசமாக நடைபெறும். அதேபோல் தனியார் பங்களிப்புடன் 4 இடங்களில் நிகழ்வு நடத்த டெண்டர் வைத்துள்ளோம்.
பாரடைஸ் பீச், சுண்ணாம்பாறு, சீகல்ஸ் உட்பட நான்கு இடங்களில் நிகழ்ச்சி நடத்த அதிக கட்டணம் நிர்ணயிப்போருக்கு டெண்டர் மூலம் நிகழ்வு நடத்த அனுமதி தரப்படும். மத்திய அரசு கரோனாவுக்காக கூறும் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவோம். மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது. மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டதும், உடன் செயல்படுத்தப்படும்.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சுற்றுலாத்துறை இம்முறை செலவிடவுள்ளது. புதுச்சேரியில் சீகல்ஸ் பழைய துறைமுக பகுதி, ஸ்டேடியம் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த போதிய மின்விளக்கு வசதியும் செய்வோம். போலீஸார் இதற் கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதற்கான திட்டத்தை காவல்துறை தயாரித்து வருகிறது. இம்முறை அதிகளவில் மக்கள் வருவார்கள். இப்போதே பெரும்பாலான ஹோட்டல்களின் அறைகள் முன்பதிவு முடிந்து விட்டது. சிறப்பு கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து முடித்துள்ளனர் என்று தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் கூறுகையில், “புதுச்சேரியில் விமான நிலையம் விரிவாக்கப் பணிக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்தி தரக்கோரியுள்ளது. அதற்கு ரூ.400 கோடி தேவை. இதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம். முதல்வர் மொத்தமாக உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 2,600 கோடிதரக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். விமான நிலையம் விரிவாக்கம், சட்டப் பல்கலைக்கழகம், கேன்சர் இன்ஸ்டியூடிட் அமைப்பது ஆகியவற்றுக்காக தேவை என்று கோரியுள்ளார்.
சிறுவிமானங்களை இயக்கும் நிறுவனங்கள் புதுச்சேரியில் இருந்து இயக்க கடிதம் அளித்துள்ளனர். சுமார் 14 இருக்கைகள் இதில் இருக்கும். விமான நிலைய விரிவாக்க தாமதத்துக்கு நிதிதான் காரணம். மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரிக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வருகை தரும் அதிகாரிகளிடமும் இது பற்றி தெரிவித்துள்ளோம். மழையால்சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT