Published : 19 Dec 2023 07:03 AM
Last Updated : 19 Dec 2023 07:03 AM
சென்னை: சுற்றுலாப் பயணிகள் இமயமலையின் அற்புதமான இயற்கை எழிலை வானிலிருந்து காணும் வகையில் நாட்டிலேயே முதல்முறையாக கைரோகாப்டர்கள் மூலம் இமாலய வான் சுற்றுலா (ஏர்சபாரி) இயக்க உத்தராகண்ட் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ராஜாஸ் ஏரோஸ்போர்ட் அண்டு அட்வெஞ்சர்ஸ் நிறுவனத்துடன் உத்தராகண்ட் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து இமயமலையின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளுக்கு இடையே கைரோகாப்டர்களை இயக்க உள்ளது. இதற்கான முதல் சோதனை ஓட்டம் கடந்த டிச.16-ம் தேதி ஹரித்வாரில் உள்ள பைராகி முகாமில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து உத்தராகண்ட் சுற்றுலா வளர்ச்சிக் கழக கூடுதல் தலைமை செயல் அதிகாரி கர்னல். அஸ்வினி பண்டிர் கூறுகையில், ``இந்த புதுமையான ஏர்சபாரி திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகள் கைரோகாப்டர்கள் மூலம் வானில் பறந்து கம்பீரமான இமயமலைத் தொடர், ஆர்ப்பரிக்கும் ஆறுகளின் வான்வழி காட்சிகளைப் பார்த்து மெய்சிலித்தபடியே ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடத்துக்கு அழைத்து வரப்படுவார்கள். தனித்துவமான மற்றும் பாதுகாப்பான வழிமுறையாக இது இருக்கும். இதற்காக ஜெர்மனியிலிருந்து அதிநவீன கைரோகாப்டர்கள் வாங்கப்பட்டுள்ளன. ஆரம்பக்கட்டமாக நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சி பெற்ற ஜெர்மனி விமானிகளால் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இது அதிகம் அறியப்படாத தொலைதூர நகரங்களுடன் சுற்றுலா பயணிகளை இணைக்கும் பாலமாக அமையும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT