Published : 12 Dec 2023 04:29 PM
Last Updated : 12 Dec 2023 04:29 PM
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்திலிருந்து ஆனைமலை ஒன்றியத்தை சுற்றியுள்ள பகுதிகள் பிரிக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆனைமலை வட்டம் உருவாக்கப்பட்டது. ஆனைமலை வட்டம் 368.13 ச.கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. 30 ஊராட்சிகளும், 5 பேரூராட்சிகளும் உள்ளன. சுமார் 1.70 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். ஆனைமலை வட்டம் உருவாக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. குறிப்பாக, ஆனைமலை பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது: ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் தென்னை மற்றும் நெல் சாகுபடி பிரதான விவசாய தொழிலாகவும், கால்நடை வளர்ப்பு உப தொழிலாகவும், தென்னை நார் சார்ந்த பொருட்கள் உற்பத்தி விவசாயம் சார்ந்த தொழிலாகவும் உள்ளது. இங்கு, 23 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் தென்னையும், பழைய ஆயக்கட்டு பகுதியில் நெல்லும் சாகுபடி செய்யப்படுகிறது. தென்னையிலிருந்து மதிப்பு கூட்டும் பொருளாக தென்னை நார், நார் துகள் கட்டிகள், நாரிலிருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலைகள் என சிறிதும் பெரிதுமாக 60-க்கும் மேற்பட்டவை உள்ளன.
அத்துடன் 10-க்கும் மேற்பட்ட கழிவு பஞ்சு மில், நூல் மில்கள் உள்ளன. நெல் அறுவடைக்கு பின்னர், வயல் மற்றும் கால்நடை கொட்டகைகள் அருகில் கால்நடைகளுக்கு உணவாக வைக்கோல் சேமித்து வைக்கப்படுகின்றன. மின்கசிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழிற்சாலைகளில் ஆண்டுக்கு 20-க்கும் அதிகமான தீ விபத்துகள் ஏற்படுகின்றன. ஆனைமலை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைக்க 14 கி.மீ. தொலைவில் உள்ள பொள்ளாச்சியில் இருந்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள் முற்றிலும் தீயில் எரிந்து சேதமாகிறது. இதேபோல், விவசாய தோட்டங்களில் வளர்க்கப்படும் கால்நடைகள் மேய்ச்சலின் போது, கால் தவறி கிணற்றில் விழுந்தாலும் அவற்றை மீட்க காலதாமதம் ஆகிறது.
ஆழியாறு அணை, ஆழியாறு ஆறு, உப்பாறு, பாலாறு, எலவக்கரை குளம், குளப்பத்து குளம் மற்றும் அணைக்கட்டுகள் என நீர் நிலைகள் நிறைந்த ஆனைமலை பகுதியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் குளிக்கும் போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்குகின்றனர். அவர்களை மீட்க பொள்ளாச்சியிலிருந்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள் சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அளித்துள்ளோம். தீயணைப்பு அதிகாரிகளிடம் முறையிட்டால், பொதுமக்களின் கோரிக்கை குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளோம். அரசாணைக்காக காத்திருக்கிறோம் என்கின்றனர். இதுவரை நடவடிக்கை இல்லை. ஆனைமலையில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT