Published : 16 Nov 2023 02:55 PM
Last Updated : 16 Nov 2023 02:55 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் நகரை ஒட்டி அமைந்துள்ளது காக்களூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள காக்களூர் ஏரி, 4 மதகுகள், 2 கலங்கல்கள் கொண்டது.30 ஆண்டுகளுக்கு முன்பு 254 ஏக்கரில் பரந்து விரிந்திருந்திருந்த இந்த ஏரி, திருவள்ளூர், காக்களூர், ஈக்காடு, கல்யாணகுப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் விவசாயத்துக்கு தேவையான நீர் ஆதாரமாக இருந்து வந்தது. திருவள்ளூர் மற்றும் காக்களூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகளாக உருமாறியதன் விளைவாக காக்களூர் ஏரியின் பயன்பாடு சற்று குறைந்தது. ஆகவே, காக்களூர் ஏரியின் ஒரு பகுதி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பு பகுதிகளாக மாறியது.
இதனால் 137 ஏக்கராக சுருங்கியுள்ள காக்களூர் ஏரி, சுமார்2 லட்சம் பேர் வசித்து வரும் திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் உள்ளிட்ட பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கக் கூடியதாகவும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரி, பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. ஆகவே, இந்த ஏரியை தூர்வாரி, படகு சவாரி உள்ளிட்ட வசதிகளுடன் சுற்றுலாத் தலமாக மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலரான சிலம்பரசன் தெரிவிக்கையில், ‘சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழன்,காஞ்சிபுரம் பகுதிக்கு படையெடுத்து வந்தபோது, காக்களூரில் முகாமிட்டுள்ளார். அப்போது, அவர் குதிரை குளம், யானை குளம் உள்ளிட்ட சிறுகுளங்கள் மற்றும் காக்களூர் ஏரியை உருவாக்கியதாக கூறப்படுகிறது. இப்படி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரி, பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இதனால், காக்களூர் பைபாஸ் சாலையை ஒட்டியுள்ள ஏரி பகுதிகள் மற்றும் கரை பகுதிகளில் பாலை செடி, சீமை கருவேல மரம், வெங்காய தாமரை, அல்லி செடி உள்ளிட்டவை மண்டி உள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் காக்களூர் ஏரியில் விடப்படுகிறது. இதனால், காக்களூர் ஏரி நீர் மாசடைந்து வருகிறது’ என்றார்.
மரம் நடும் பணி உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் வாகை அறக்கட்டளையின் பொறுப்பாளரான சண்முகம் கூறும்போது, ‘திருவள்ளூர் ஜே.என்.சாலையை ஒட்டியுள்ள காக்களூர் ஏரிக்கரையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டதோடு, மாற்று இடம் வழங்கவும்நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள், ஆக்கிரமிப்பை அகற்ற முன்வரவில்லை. அதேநேரத்தில், ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறை அதிகாரிகள் இதுவரை அகற்றவில்லை.
இந்நிலையில், காக்களூர் பைபாஸ் சாலையை ஒட்டியுள்ள, காக்களூர் ஏரி பகுதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்புக்குள்ளாகி வருகின்றன. பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ஆவடி சாலையை ஒட்டி, காக்களூர் ஏரிக்கரையில் சுமார் 4 கி.மீ. தூரத்துக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடைபாதை அமைக்கப்பட்டது. ஆனால், அப்பாதை முறையாக பராமரிக்கப்படாததால், தற்போது புதர் மண்டி காணப்படுவதோடு, மது பிரியர்களுக்கான திறந்த வெளி மதுக் கூடமாக உருமாறியுள்ளது.
இதனால், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள இந்த நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, காக்களூர் ஏரியை தூர்வாரியும், ஆக்கிரமிப்புகளை அகற்றியும், கழிவுநீர் ஏரியில் கலக்காதவாறும், நடைபாதையை சீரமைத்து, மேம்படுத்தி, படகு சவாரி உள்ளிட்ட வசதிகளுடன் சுற்றுலாத் தலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து, நீர் வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கும்போது, ‘உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ், காக்களூர் ஏரியை மேம்படுத்தி, படகு சவாரி உள்ளிட்ட வசதிகளுடன் சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுக்கு பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஏற்கெனவே கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த கோரிக்கை மனு மீது அரசு பரிசீலனை செய்து, காக்களூர் ஏரியை மேம்படுத்தி சுற்றுலாத் தலமாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யும்போது, தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு காக்களூர் ஏரி மேம்படுத்தப்பட்டு சுற்றுலாத் தலமாக மாறும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT