Last Updated : 06 Nov, 2023 02:25 PM

 

Published : 06 Nov 2023 02:25 PM
Last Updated : 06 Nov 2023 02:25 PM

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் இருந்து அமிர்தி பூங்காவுக்கு புதுவரவு உயிரினங்கள்

வேலூர்: கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் இருந்து உரிய பாதுகாப்புடன் அமிர்தி பூங்காவுக்கு நேற்று உயிரினங்கள் கொண்டு வரப்பட்டன. இதேபோல, மேலும் பல உயிரினங்கள் அமிர்தி பூங்காவுக்கு வர உள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர். கோயம்பத்தூர் மாநகராட்சி பராமரிப்பில் காந்திபுரம் நேரு மைதானம் அருகே வ.உ.சி உயிரியல் பூங்கா கடந்த 1965-ம் ஆண்டு தொடங் கப்பட்டது. 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இந்த உயிரியல் பூங்காவில் ஆரம்ப காலத்தில் சிங்கம், புலி, யானை, காட்டெருமை, புள்ளி மான், மலைப்பாம்பு, முதலை போன்ற உயிரினங்கள் இருந்தன. கோவை மாநகர மக்களுக்கு இந்த வ.உ.சி. பூங்கா பிரதான பொழுதுபோக்கு மையமாக இருந்தது.

இந்நிலையில், போதிய பராமரிப்பு இல்லை என்பதாலும், வன விலங்குகள் பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் காரணமாக பெரிய விலங்குகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பூங்காக்களுக்கு மாற்றம் செய்யப்பட்டன. இதையடுத்து, சிறிய வகை விலங்குகள், பறவைகள் மட்டும் வ.உ.சி. உயிரியில் பூங்காவில் பரா மரிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த உரிமத்தை மத்திய வன உயிரின ஆணையம் ரத்து செய்தது. போதிய மேம்பாட்டு பணிகளை செய்யாததால் உயிரியல் பூங்காவுக்கான உரிமம் புதுப்பிக்கப்படாமல் ரத்து செய்து மத்திய வன உயிரின ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வ.உ.சி. உயிரியில் பூங்காவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் மூடப்பட்டது. அங்கு இருந்த உயிரினங்களான முதலைகள், பாம்புகள், வாத்து, கிளிகள், மான்கள் உள்ளிட்டவை பல்வேறு பூங்காவுக்கு மாற்றப்பட்டு வந்தன.

அதன்படி, வேலூர் மாவட்டம் அமிர்தி பூங்காவுக்கு கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் இருந்து முதலைகள், நட்சத்திர ஆமைகள், பாம்பு வகைகள் கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து வந்த வன உயிரினங்களை அமிர்தி வன அலுவலர் குணசேகரன் தலைமையிலான வனத்துறையினர் ஆய்வு செய்து உள்ளே அனுமதித்தனர். இதுகுறித்து அமிர்தி வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, ‘‘ வேலூர் மாவட்டம் அமிர்தி பூங்காவானது ஜவ்வாதுமலை தொடரில் வடக்கு திசையில் அமைந்துள்ளது. 25 ஹெக் டேர் பரப்புள்ள அமிர்தி பூங்காவில் ஏற்கெனவே, 130 வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் மான்கள் அதிகமாக உள்ளன. 1967-ம் ஆண்டு அமிர்தி பூங்கா தொடங்கப் பட்டது. வேலூர் மாவட்ட மக்களின் பெரிய பொழுதுபோக்கு அம்சமாக அமிர்தி பூங்கா இன்று வரை இயங்கி வருகிறது.

இந்நிலையில், கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா கடந்த ஆண்டு மூடப்பட்டதால் அங்குள்ள வன உயிரினங்கள் வண்டலூர், சத்திய மங்கலம், முதுமலை, மொய்யாறு போன்ற பகுதியில் உள்ள உயிரியல் பூங்காக்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, அமிர்தி பூங்கா வுக்கு கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் இருந்து 2 முதலைகள், 3 நட்சத்திர ஆமைகள், 4 பாம்பு வகைகள் இன்று (நேற்று) கொண்டு வரப்பட்டு, அமிர்தி பூங்காவில் விடப்பட்டுள்ளன.

அதேபோல, சேலம் மாவட்டம் குருமம்பட்டி பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து சாரை பாம்பு, மலைப்பாம்பு, கட்டு விரியன் பாம்பு, மான் ஆகிய வன உயிரினங்கள் அமிர்தி பூங்காவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வரு கின்றன. விரைவில் சேலத்தில் இருந்து வன விலங்குகள் இங்கு கொண்டு வரப் படும். அதன் மூலம் அமிர்தி பூங்காவில் வன உயிரினங்களின் எண்ணிக்கை 140-ஐ தாண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x