Published : 02 Nov 2023 04:01 AM
Last Updated : 02 Nov 2023 04:01 AM
புதுச்சேரி: புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரியாக ஊசுட்டேரி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை உள்ளடக்கியுள்ள ஊசுட்டேரிக்கு சங்கராபரணி ஆறு மற்றும் வீடூர் அணையில் இருந்து நீர் வருகிறது. இதன் மொத்த கொள்ளளவு 540 மில்லியன் கன அடியாகும். இந்த ஏரிக்கு நவம்பர் மாதம் முதல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பறவைகள் இனப்பெருக்கத்துக்காக வலசை வந்து போகின்றன.
புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் இங்கு படகு குழாமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்ஜின் படகு, பெடல் படகுகள் உள்ளன. புதுச்சேரிக்கு முன்பு சுற்றுலா வருவோர் தவறாமல் வந்து செல்லும் பகுதிகளில் ஊசுட்டேரியும் ஒன்றாக இருந்து வந்தது. சரியான பராமரிப்பு இல்லாததால் தற்போது வரத்து குறைந்து வருகிறது. சமீப காலமாக ஊசுட்டேரி படகு குழாம் பராமரிப்பின்றி உள்ளது. கடந்த ஒரு மாதமாக இங்கு படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் விளையாடி மகிழ போதிய உபகரணங்கள் இல்லை. இதனால் இங்கு வரும் குழந்தைகள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் புதுச்சேரி மக்கள் கூறும்போது, “புதுச்சேரியில் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இருக்கின்ற சுற்றுலா தலங்களையும் பாழாக்கும் நிலை தான் தொடர்கிறது. குறிப்பாக ஊசுட்டேரியில் போதியபராமரிப்பு, அடிப்படை தேவைகள் எதுவும் இல்லை. தற்போது படகு சவாரியும் நிறுத்தப்பட்டு விட்டது. குழந்தைகள் விளையாட ஒரேயொரு சறுக்கு விளையாட்டு உபகரணம் மட்டுமே உள்ளது. அதுவும் சேதமடைந்து காணப்படுகிறது. வெறுமையாக, இங்கு வந்து அமர்ந்து விட்டு செல்ல மட்டுமே முடிகிறது. மற்றபடி பொழுதை கழிக்க வேறொன்றும் இல்லை.
படகுகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் விளையாட போதிய விளையாட்டு உபகரணங்களை அமைக்க வேண்டும். கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கின்றனர். புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தரப்பில் விசாரித்தபோது, “ஊசுட்டேரியில் 2 இன்ஜின் படகுகள், 5-க்கும் மேற்பட்ட பெடல் படகுகள் உள்ளன. இவை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரையிலும் இயக்கப்பட்டு வந்தன. தற்போது அங்குள்ள இன்ஜின் படகுகள் பழுது பார்க்கும் பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து பெடல் படகுகள் இயக்கப்பட்டன.
இருப்பினும் பெடல் படகில் செல்பவர்கள் ஏரியில் சிக்கிக்கொண்டால் இன்ஜின் படகுகள் மூலமாக சென்றுதான் மீட்க வேண்டும். இதன் காரணமாக பெடல் படகுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. விரைவில் சீரமைக்கப்பட்டு, இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு உபகரணங்களும் சீரமைக்கப்படும்” என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT