Published : 25 Oct 2023 01:12 PM
Last Updated : 25 Oct 2023 01:12 PM
மதுரை: உலகின், இந்தியாவின் மற்றும் தமிழகத்தின் முதல் அருங்காட்சியகங்கள் குறித்து பல்வேறு அரிய தகவல்களுடன் ஒரு மாத காலம் நடைபெறும் புகைப்படக் கண்காட்சி மதுரையில் தொடங்கியுள்ளது. இக்கண்காட்சி பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்திலுள்ள மதுரை அரசு அருங்காட்சியகத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘மனித சமுதாயத்தின் கலைக்களஞ்சியங்கள்’ எனும் தலைப்பில், உலக நாடுகளில் அருங்காட்சியகத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றிய புகைப்படக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதை, அருங்காட்சியக ஆணையர் மா.அரவிந்த் அக்.22-ல் தொடங்கி வைத்தார். இக்கண்காட்சி நவ.22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில், அருங்காட்சியகம் பற்றி பல்வேறு உலக நிறுவனங்கள் அளித்த விளக்கங்கள், கி.மு.288 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட மிகப் பழமையான அலெக்ஸாண்டிரிய அருங்காட்சியகம் தொடங்கி, கி.பி.1753-ல் தொடங்கப்பட்ட பிரிட்டிஷ் அருங்காட்சியகம் வரை என உலகில் உள்ள முக்கியமான நாடுகளில் தோற்றுவிக்கப்பட்ட அருங்காட்சியகங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது காண்போரை கவர்ந்துள்ளது.
இதுகுறித்து மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர்மீ.மருதுபாண்டியன் கூறியதாவது: அருங்காட்சியகம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில், உலகின் முக்கியமான அருங்காட்சியகங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் 1814-ல் தொடங்கப்பட்ட பழமையான கல்கத்தா அருங்காட்சியகம், 1851-ல் தொடங்கப்பட்ட சென்னை அரசு அருங்காட்சியகம், விக்டோரியா அருங்காட்சியகம், பிரின்ஸ் ஆப் வேல்ஸ் அருங்காட்சியகம், திருவனந்தபுரம் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், பரோடா அருங்காட்சியகம் ஆகியவற்றின் புகைப்படங்களை காட்சிப்படுத்தியுள்ளோம்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மத்திய, மாநில அரசுகளின் தீவிர முயற்சியால் மேலும் பல அருங்காட்சியகங்கள்தோன்றின. மத்திய தொல்லியல் நிறுவனமும் அருங்காட்சியகங்களை ஏற்படுத்தியது. இவை தவிர சம்பா, ஜோத்பூர், கஜூராகோ, குவாலியர், டாக்கா போன்ற அருங்காட்சியகங்கள் 20-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டன.
தமிழகத்தில் மிகப் பழமையான அருங்காட்சியகமாக சென்னை அரசு அருங்காட்சியகம் 1851-ல் தொடங்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குட்பட்ட இடத்தில் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் ஏற்படுத்தப்பட்டது. மேலும், மதுரையில் 1981, திருச்சியில் 1983, வேலூர் உட்பட மாவட்டந்தோறும் அருங்காட்சியகங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதில், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் பல அருங்காட்சியகங்கள் ஏற்படுத்தப்பட்டன.
தற்போது, தமிழக அரசின் முயற்சியால் விழுப்புரம், தூத்துக்குடி, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் மாவட்ட அருங்காட்சியகம் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், சோழர்களின் பங்களிப்பை உலகறியச் செய்ய தஞ்சாவூரில் சோழ அருங்காட்சியகம் உருவாக்க ஆய்வுப் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT