Published : 03 Oct 2023 04:18 PM
Last Updated : 03 Oct 2023 04:18 PM
உதகை: தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வாக, நாடு முழுவதும் இருந்து பெறப்பட்ட 795 விண்ணப்பங்களில், நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சியில் உள்ள பசுமையான உல்லாடா கிராமம், மத்திய சுற்றுலா துறையால் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கிராண்ட் கேன்யனுக்கு பிறகு, இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கான கேத்தி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது உல்லாடா கிராமம். உலக பிரசித்தி பெற்ற கேத்தி ரயில் நிலையம், நீர்வீழ்ச்சி, பாறைகள் மற்றும் விவசாய நிலங்களை கொண்டுள்ளது இந்த அழகிய கிராமம். பேரூராட்சியின் மதிப்பீட்டின்படி, இந்த கிராமத்தில் 120 வீடுகளில் சுமார் 720 பேர் வசிக்கின்றனர், அவர்கள் அனைவரும் படுகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் முக்கிய சாகுபடி கேரட், பீன்ஸ், பீட்ரூட் மற்றும் தேயிலை.
இந்த கிராமத்தில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை மார்ச் மாதத்தில் ‘குண்டம்’ விழா நடைபெறும். அப்போது, படுகரின மக்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து நடனமாடுவர். இது, உள்ளூர் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.
பெருமையான தருணம்: மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்தது குறித்து, உல்லாடா கிராமத்தின்தலைவர் பி.மாதன் கூறும்போது, "கேத்தி பள்ளத்தாக்கில் 14 கிராமங்களை பார்க்க முடியும். மேலும், கேத்தி ரயில் நிலையம் எங்கள் கிராமத்தில் அமைந்துள்ளது, அங்கு பல கோலிவுட் மற்றும் பாலிவுட் படங்கள் இயற்கையான பின்னணியில் படமாக்கப்படுகின்றன. விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எங்கள் கிராமத்துக்கு பெருமையான தருணம்" என்றார்.
சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறும்போது, "நாட்டின் அனைத்துமாநிலங்களிலும் சுற்றுலாவை மேம்படுத்தவும், சர்வதேச சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கவும், வருகையை அதிகப்படுத்தவும் சுற்றுலா மேம்பாட்டுக் குழு ஒன்றை அமைத்து, பல்வேறு புதிய சுற்றுலா தலங்களை மத்திய சுற்றுலா அமைச்சகம் கண்டறிந்துள்ளது. பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வுகள் மேற்கொண்டு, அமைச்சகம் வாயிலாக புதிய மற்றும் முக்கிய சுற்றுலா தலங்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
நாடு முழுவதுமுள்ள சுற்றுலா கிராமங்களை கண்டறியும் வகையில், மத்திய அரசின் சார்பில் உள்ளுர் கலை, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்தி, பாதுகாக்கும் கிராமங்களை கவுரவப்படுத்தும் வகையில் போட்டிகள்நடத்தப்பட்டன. நாட்டிலுள்ள 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து மொத்தம் 795 விண்ணப்பங்கள் பெறப் பட்டன. அதில், 2023-ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா கிராமமாக உல்லாடா தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
உல்லாடா கிராமம் சிறியதாக இருந்தாலும், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, வங்கி மற்றும் காவல் நிலையம் ஆகியவை உள்ளன.
மேம்படுத்த நடவடிக்கை: இந்த இடத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடும்போது, புதிய அனுபவத்தை பெறலாம். மேலும், படுகரின மக்களின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் அவர்களின் விவசாய நடைமுறைகள் குறித்து அறியும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
உதகை மற்றும் குன்னூருக்கு அருகாமையில் இந்த கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில், கிராமத்தில் தங்கும் விடுதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக சுற்றுலாதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT