Published : 30 Sep 2023 05:30 PM
Last Updated : 30 Sep 2023 05:30 PM
போடி: போடிமெட்டு - மூணாறு இடையே தேயிலை தோட்டங்கள், பசுமையான பள்ளத்தாக்கு, மூடுபனி பின்னணியில் இருவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை வெளி நாட்டில் பயணிப்பது போன்ற ரம்மியமான சூழ்நிலையை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது. இச்சாலையை அக்.12-ல் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைக்க உள்ளார்.
தனுஷ்கோடி-கொச்சி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி, 2017-ல் தொடங்கியது. இதில் போடிமெட்டு - மூணாறு இடையே 42 கி.மீ. தூரம் உள்ள மலைச் சாலை ரூ.381.76 கோடி மதிப்பீட்டில் அகலப் படுத்தப்பட்டது. லாக்கார்டு எனும் பகுதியில் உள்ள மலையை வெடி வைத்து தகர்த்த போது, அப்பகுதியில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் அதிகளவில் உயிரிழப்பும் ஏற்பட்டது. இதனால், இந்த இடத்தில் சாலையை அகலப்படுத்துவதில் பல ஆண்டுகளாக தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது, இப்பணி முழுமை அடைந்துள்ளது.
தேயிலை தோட்டங்கள், மலைத் தொடர்கள் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. பசுமை பள்ளத்தாக்கும், மூடுபனியும் நிறைந்த இப்பகுதியை வாகனங்களில் கடந்து செல்வது, வெளிநாட்டில் பயணிப்பது போன்ற மனநிலையை உருவாக்குகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பலரும் ஆங்காங்கே நின்று புகைப்படம் எடுத்தும், தேயிலைத் தோட்டங்களை ரசித்தபடியும், இப்பகுதியை கடந்து செல்கின்றனர்.
இரு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்ட இச்சாலை கட்டுமானப் பணி முடிந்து பல மாதங்களாகிறது. ஆக.17-ல் இச்சாலை திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இச்சாலையை அக்.12-ம் தேதி மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து இது சுங்கச்சாலையாக மாற உள்ளது. இதற்காக, தேவிகுளம் அருகே சுங்கச்சாவடி கட்டும் பணி முழுமை அடைந்துள்ளது.
பல ஆண்டுகளாக இச்சாலை சீரமைப்புப் பணிக்காக போடிமெட்டு வழியே வரும் வாகனங்கள், பூப்பாறை, ராஜகுமாரி வழியே மூணாறுக்கு சுற்றிச்சென்றன. தற்போது, இச்சாலை மூலம் மூணாறுக்கு விரைவாகவும், தேயிலை தோட்டங்கள் வழியே இயற்கை அழகை ரசித்தபடியும் சென்று வருகின்றனர்.
இதுகுறித்து இடுக்கி எம்.பி. டீன்குரியாகோஸ் கூறுகையில், ‘அக்.12-ல் போடிமெட்டு-மூணாறு சாலையை காணொலி மூலம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைக்கிறார். அன்றைய தினம் குமுளி-அடிமாலி தேசிய நெடுஞ்சாலையை (எண்-185) அகலப்படுத்துவதற்கான பணிகளை தொடங்கி வைக்கிறார்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT