Published : 28 Sep 2023 02:49 AM
Last Updated : 28 Sep 2023 02:49 AM

சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு ஒளி, ஒலிக்காட்சி இலவசம் - திருமலை நாயக்கர் அரண்மனையில் திரண்ட பயணிகள்

மதுரை: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மதுரை திருமலைநாயக்கர் அரண்மனையில் சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் திரண்டனர்.

உலக சுற்றுலா தினம் செப்., 27ம் தேதி கொண்டாடப்படுகிறது நேற்று சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள மீனாட்சிம்மன் கோயில், திருமலைநாயக்கர் அரண்மனை, காந்தி மியூசியம் போன்ற சுற்றுலா ஸ்தலங்களில் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலாப் பயணிகள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் திரண்டனர்.

பள்ளிகள், கல்லூரிகளில் இருந்து நேற்று ஏராளமானோர் மாணவர்களை சுற்றுலாவுக்கு திருமலை நாயக்கர் அரண்மனைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் அரண்மனையை ரசித்து பார்த்து பிரமிப்பு அடைந்தனர். அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டிகளும், அவர்களுடன் வந்த ஆசிரியர்களும் திருமலை நாயக்கர் மன்னர்கள், அவர்கள் ஆட்சி செய்த இந்த அரண்மனை வரலாறுகளை எடுத்து கூறினர்.

திருமலை நாயக்கர் அரண்மனையில் தற்போது பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இப்பணி நடந்து வந்தாலும் தற்போது சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். திருமலை நாயக்கர் அரண்மனையில் தினமும் மாலை 6.45 மற்றும் 8 மணியளவில் தமிழ், ஆங்கிலத்தில் மதுரையின் வரலாறு பற்றி சுற்றுலாப் பயணிகளுக்கு ஒளியும், ஒலி காட்சி காட்டப்படுகிறது.

நேற்று உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகள் இலவசமாக இந்த காட்சிகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும், மதுரையின் சுற்றுலாவை பிரபலப்படுத்தும் வகையிலும், அடுத்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் வகையிலும், இன்று 50 பள்ளி மாணவர்களை தேர்வு செய்து, சுற்றுலாத் துறை மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலா ஸ்தலங்களுக்கு இலவசமாக அழைத்து சென்று சுற்றிக்காட்ட உள்ளது.

இதுதொடர்பாக சுற்றுலாத் துறை அலுவலர் ஸ்ரீபாலமுருகன் கூறுகையில், ‘‘கரோனாவுக்கு பிறகு மதுரைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. மாதம் 4 ஆயிரம் முதல் 8,500 வரையிலான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும், 14 லட்சம் முதல் 23 லட்சம் வரையிலான உள் நாட்டு சுற்றுலாப்பயணிகளும் மதுரைக்கு வருகிறார்கள். கோடை காலம், பள்ளி விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. பொங்கல் பண்டிகை மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக உள்ளது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x