Published : 22 Sep 2023 06:24 PM
Last Updated : 22 Sep 2023 06:24 PM
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் மாதத்தில் 10 நாட்களுக்கு மேல் நீர்மட்டம் தாழ்ந்து படகுகள் தரைதட்டுவதால் படகு சேவை தடைபட்டு வருகிறது. படகு தளத்தை ஆழப்படுத்தி சீரமைத்தால் மட்டுமே படகுகள் தரைதட்டுவதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆண்டுக்கு 85 லட்சம் முதல் 1 கோடி வரையிலான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைகளுக்கு படகு சவாரி செய்து பார்வையிடுவது, சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தருகிறது.
அத்துடன் கன்னியாகுமரியில் திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், வட்டக்கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை, சிற்றாறு, களியல், பேச்சிப்பாறை என இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா மையங்களும் நிறைந்திருப்பதால், இங்கு வருவோர் 3 நாட்கள் வரை தங்கி சுற்றிப் பார்த்து செல்கின்றனர்.
கன்னியாகுமரியின் முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக படகு சவாரியே உள்ளது. ஆனால் கடல் நீர்மட்டம் தாழ்வது மற்றும் கடல் சீற்றத்தால் படகு சேவை ரத்து செய்யப்படுவது பெரும் பிரச்சினையாக உள்ளது.
கடலுக்குள் விவேகானந்தர் பாறையில் உள்ள படகு தளம் இயற்கையாகவே ஆழமாக இருப்பதுடன், படகுகளை நிலைநிறுத்த ஏற்ற இடமாக உள்ளது. தற்போது இங்கு 100 மீட்டர் நீளம் வரை படகை நிறுத்தும் வகையில் மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் படகு தளம் விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஆனால் திருவள்ளுவர் சிலையின் அருகிலுள்ள சிறிய பாறைகளாலும், ஆழம் குறைவு என்பதாலும் கடல் நீர்மட்டம் சற்று குறைந்தால் கூட படகை நிலைநிறுத்த முடிவதில்லை. இதனால் பெரும்பாலான நாட்களில் விவேகானந்தர் பாறைக்கு மட்டும் படகுகள் இயக்கப்படுகிறது. அங்கு நின்றவாறே திருவள்ளுவர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்ல வேண்டியதுள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை இடையே தற்போது கண்ணாடி இழை பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணி நிறைவடையும்போது விவேகானந்தர் பாறையில் அமையும் பெரிய படகு தளத்தில் ஒரே நேரத்தில் 3 படகுகள் வரை நிறுத்தி, ஆட்களை ஏற்றி இறக்க முடியும்.
கரையில் உள்ள படகு இல்லம் தளத்தில், கடல் நீர்மட்டம் தாழ்ந்தால் படகுகள் தரைதட்டுகின்றன. அங்குள்ள மணல் திட்டுகளை அவ்வப்போது அகற்றினாலும் பிரச்சினை நீடிக்கிறது.
கன்னியாகுமரியை சேர்ந்த சுற்றுலா ஆர்வலர்கள் கூறியதாவது: கன்னியாகுமரியில் 5 சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன. கடல் நீர்மட்டம் சிறிதளவு தாழ்ந்தாலும் படகு இல்லத்தில் படகுகள் தரைதட்டி நிற்ற்கின்றன. பவுர்ணமி, அமாவாசையை ஒட்டிய 5 தினங்கள் இந்நிகழ்வு ஏற்படுவது வழக்கம். இதனால் மாதத்தில் 10 நாட்களுக்கு மேல் படகுகள் சேவை ரத்து செய்யப்படுகிறது. இச்சமயங்களில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
படகு தளத்தில் உருவாகும் மணல் திட்டுகளை வாடகை பொக்லைன் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தினர் அகற்றி வருகின்றனர். அரசுக்கு பல கோடி வருவாய் ஈட்டிகொடுக்கும் படகு சேவையை தடைபடாமல் இயக்கும் வகையில் நிரந்தரமாக நவீன பொக்லைன் வாங்க வேண்டும். அத்துடன் படகு தளத்தை ஆழப்படுத்தி தூர்வாரினால் மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.
வருகிற அக்டோபர் மாதம் தசரா விடுமுறையின் போது வடமாநில சுற்றுலா பயணிகள் அதிகமானோர் குவிவர். எனவே சீஸன் காலத்தில் படகு சேவை தடைபடாமல் நடைபெறும் வகையில் படகு தளத்தை ஆழப்படுத்தி சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT