Published : 21 Sep 2023 03:26 PM
Last Updated : 21 Sep 2023 03:26 PM
திருவள்ளூர்: சுற்றுலா தலமான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்க வளாகத்தில், பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கும் பூங்காக்களை அரசு புனரமைத்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் அருகே பூண்டியில் அமைந்துள்ள சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். இந்நீர்த்தேக்கம், சென்னை மாநகராட்சி மேயராக இருந்த, விடுதலை போராட்ட வீரர் சத்தியமூர்த்தியின் முயற்சியால், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கடந்த 1944-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
பூண்டியை ஒட்டியுள்ள 10 கிராம மக்களை வெளியேற்றி, அவர்களை வேறு இடங்களில் குடியமர்த்தி, அமைக்கப்பட்ட இந்த நீர்த்தேக்கம் 121 சதுர கி.மீ. பரப்பளவும் 35 அடி உயரமும் 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவும் கொண்டது. இந்த சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில், கொசஸ்தலை ஆற்றுநீர் மற்றும் நீர்த்தேக்கத்தை ஒட்டியுள்ள ஆந்திர மலைப்பகுதிகள், தமிழக வனப்பகுதிகள் உள்ளிட்ட நீர்ப்பிடிப்புபகுதிகளில் பெய்யும் மழைநீர் மற்றும் தெலுங்கு கங்கைதிட்ட ஒப்பந்தப்படி, ஆந்திர அரசு வழங்கும் கிருஷ்ணா நீர் ஆகியவை சேமிக்கப்பட்டு, பிறகு அவை கால்வாய்கள் மூலம் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்க வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்கள், நீர்வள ஆதாரத்துறை மற்றும் நீர் வளத்துறையின் கீழ் உள்ள பூண்டி நீரியல், நீர் நிலையியல் ஆய்வுக் கழகம் ஆகியவற்றின் கீழ் உள்ளன.
இங்கு பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிமனிதர்கள் பயன்படுத்திய கல்லாயுதங்களை அடைகாக்கும் பூண்டி தொல்லியல் அருங்காட்சியகமும் உள்ளது. இதை பார்க்க சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழக பகுதிகள் மட்டுமல்லாமல், ஆந்திர பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து சென்றனர். சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருந்த பூண்டி நீர்தேக்கம் சில ஆண்டுகளாக சிதிலமடைந்து உள்ளது.
அதே நேரம் பூண்டி நீரியல், நீர் நிலையியல் ஆய்வுக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அறிவியல் பூங்காமட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரூ.41.50லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் உபகரணங்கள், டைனோசர் சிலை, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவைகளும் அப்போது புதுப்பிக்கப்பட்டன. ஆனாலும் இந்த அறிவியல் பூங்கா இன்னும் திறக்கப்படவேயில்லை.
மற்ற பூங்காக்கள் முறையான பராமரிப்பு இல்லாததால், விளையாட்டு உபகரணங்கள் உடைந்தும், செயற்கை நீர் ஊற்றுகள் பழுதடைந்தும், செடி, கொடிகள் மண்டியும் பல ஆண்டுகளாக சிதிலமடைந்தும் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், திறந்தவெளி மதுஅருந்தும் கூடமாகவும் உருமாறி வருகின்றன.
இதனால், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள், குழந்தைகள் விளையாடவும், தாங்கள் மன மகிழ்ச்சியுடன் பொழுதை கழிக்கவும் வழியில்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இதுகுறித்து, பூண்டி பகுதியை சேர்ந்த ரமேஷ் கூறும்போது, ‘’தமிழக தலைநகர் சென்னை அருகே முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் வண்ண மலர் செடிகள், விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீருற்றுகள், செடிகளால் ஆன அலங்கார தோரணங்கள் என ஒருகாலத்தில் ஜொலித்த பூங்காக்கள் இன்று பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகின்றன’’ என்றார் வேதனையுடன்.
சமூக ஆர்வலரான முருகன் கூறும்போது,’’ நீர்த்தேக்கம் மற்றும் பூண்டி தொல்லியல் அருங்காட்சியகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், பூங்காக்களை புனரமைத்து, தொடர்ந்து பராமரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து, நீர்வள ஆதாரத் துறை மற்றும் பூண்டி நீரியல், நீர் நிலையியல் ஆய்வுக் கழக அதிகாரிகள் தெரிவிக்கையில்,’’ பூண்டி நீர்த்தேக்க வளாகத்தில் சிதிலமடைந்துள்ள பூங்காக்களை புனரமைக்க திட்டமதிப்பீடு தயாரித்து, அரசின் அனுமதிக்கு அனுப்பியுள்ளோம். அரசு அனுமதி கிடைத்த உடன், பூங்காக்கள் புனரமைக்கும் பணி தொடங்கப்படும். புதுப்பிக்கப்பட்ட அறிவியல் பூங்காவை தொடர்ந்து பராமரிக்க போதியநிதி மற்றும் பணியாளர்கள் இல்லாததால், அப்பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரமுடியாத நிலை உள்ளது.
ஆகவே, அறிவியல் பூங்காவை தொடர்ந்து பராமரிக்கவும், போதிய பணியாளர்களை நியமிக்கவும் உரிய நிதி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் அரசு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத்த உடன் போதிய பணியாளர்களுடன் அறிவியல் பூங்கா பயன்பாட்டுக்கு வரும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment