Published : 18 Sep 2023 03:50 PM
Last Updated : 18 Sep 2023 03:50 PM
திருச்சி: திருச்சி விமான நிலையம் அருகில் அண்ணா அறிவியல் மையம்- கோளரங்கம், 1999-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு முதலில் முப்பரிமாண படக்காட்சி அரங்கம், சுற்றுச்சூழல் காட்சிக்கூடம், 3டி காட்சியகம் ஆகியவை அமைக்கப்பட்டன. இந்த கோளரங்கில் நட்சத்திரம், சூரிய குடும்பம் உள்ளிட்டவை தினமும் காட்சிப்படுத்தப்பட்டு வந்தது.
இங்கு தினந்தோறும் பள்ளி மாணவ, மாணவிகள் வந்து செல்வார்கள். இந்நிலையில், இந்தக் கோளரங்கத்தில் இருந்த வான்வெளி காட்சிக்கூடம் தற்போது ரூ.3 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட 4கே தொழில்நுட்பத்தில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இங்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘RSA COSMOS' என்ற டிஜிட்டல் வான்வெளி அரங்கு 64 இருக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கூரையில் அரைக்கோள வடிவம் கொண்ட இந்த வானியல் அரங்கில், கோள்கள், பால்வெளி அண்டம், விண்மீன் கூட்டங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு காட்சியும் அரை மணி நேரம் வீதம் தினமும் 6 காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. இதைத்தொடர்ந்து இவற்றை காண திருச்சி மட்டுமில்லாது புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து அண்ணா அறிவியல் மையத்தின் திட்ட இயக்குநர் அகிலன் கூறியது: தமிழக அரசின் வழிகாட்டுதல்படி டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கோளரங்கத்தில் 6 மாதத்துக்கு ஒரு முறை தற்போது காண்பிக்கப்படும் காட்சிகள் மாறுபடும். தற்போது, காட்சிப்படுத்தப்படும் பேரண்டம் 3டி முறையில் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.
64 இருக்கைகள் கொண்ட அரங்கில் நாளொன்றுக்கு 6 காட்சிகள் (2 ஆங்கிலம்) காண்பிக்கப்படுகின்றன. அனைத்து காட்சிகளிலும் இருக்கைகள் நிரம்பிவிடுகின்றன. வரும் காலங்களில் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இந்தக் காட்சிக்கான நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.45, சிறியவர்களுக்கு ரூ.25 வசூலிக்கப்படுகிறது என்றார்.
இதுகுறித்து கோளரங்கத்துக்கு வருகை தந்தை திருச்சியைச் சேர்ந்த பள்ளி மாணவர் அகிலேஷ் கூறியது: இந்த அரங்கில் காணும் காட்சி, வான்வெளியை நம் கண்முன்னே காட்சிப்படுத்துகிறது. வான்வெளியில் நாம் இருப்பது போன்ற மெய் நிகர் உணர்வு ஏற்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது’’ என்றார்.
நுழைவுக் கட்டணமாக ஒரே மாதத்தில் ரூ.4.25 லட்சம் வசூல்: கோளரங்கம் டிஜிட்டல் மயமாக்குவதற்கு முன்பு மாதந்தோறும் சராசரியாக 5 ஆயிரம் பேர் வருகை புரிந்தனர். தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கோளரங்கத்தில் காட்சிகளை காண குடும்பத்துடன் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மையம் செயல்பாட்டுக்கு வந்த ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் இதுவரையிலான சுமார் ஒரு மாதத்தில் சுமார் 13 ஆயிரம் பேர் வருகை தந்து காட்சிகளை பார்வையிட்டுள்ளனர். இதேபோல மாதம் முழுவதும் கட்டணமாக ரூ.1.50 லட்சம் மட்டுமே இருந்த நிலையில், தற்போது, இவை சுமார் 3 மடங்கு அதிகரித்து, ரூ.4.25 லட்சம் வசூலாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT