Published : 10 Sep 2023 09:47 AM
Last Updated : 10 Sep 2023 09:47 AM

பெரியவர்களுக்கு நுழைவு கட்டணம் ரூ.200 - வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயர்த்தப்பட்ட புதிய கட்டணங்கள் அமல்

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயர்த்தப்பட்ட புதிய கட்டணங்கள் அமலுக்கு வந்தன.

நாட்டிலுள்ள மிகப் பெரிய மற்றும் பழமையான உயிரியல் பூங்காக்களில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்று. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் கால நிலை மாற்ற அமைச்சகத்தால் 2022-ம் ஆண்டில், நாட்டிலேயே சிறந்த மிருகக் காட்சி சாலை என மதிப்பிடப்பட்டது.

தற்போது, பூங்காவில் 170 வகைகளை சேர்ந்த 1,977 வன விலங்குகள் உள்ளன. மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள அரிய மற்றும் அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த பூங்கா செயல்படுகிறது. இப்பூங்காவுக்கு ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

உயிரியல் பூங்கா நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் பூங்காவின் நுழைவுக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை மாற்றியமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. சக்கர நாற்காலிக்கான கட்டணம் ரூ.25 ரத்துசெய்யப்படுகிறது.

இரு சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள், வேன், பயணிகள் டெம்போ, மினி பேருந்து மற்றும் பேருந்துகளுக்கான நிறுத்தக் கட்டணம் மணிக் கணக்கில் இருந்து நாள் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

மேலும், பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.115-லிருந்து ரூ.200 ஆகவும், பேட்டரி வாகன கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.150 ஆகவும், சஃபாரி வாகன கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.150 ஆகவும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் குழுவாக வந்தால் 5 முதல் 17 வயதுவரை ரூ.20 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டணங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதே போல, கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் குரும்பபட்டி பூங்கா, வேலூர் அமிர்தி பூங்காவிலும் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் நேற்றுமுதல் அமலுக்கு வந்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x