Published : 17 Aug 2023 06:09 PM
Last Updated : 17 Aug 2023 06:09 PM
திண்டுக்கல்: கொடைக்கானலில் 12 மைல் சுற்றுச் சாலையில் உள்ள சுற்றுலா இடங்ளுக்கு செல்லும் வாகனங்களுக்கு 4 வகையான சான்றிதழ் அவசியம் எனவும், பேரிஜம் ஏரிக்கு ஒரு நாளைக்கு 50 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என வனத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கொடைக்கானலில் 12 மைல் சுற்றுச் சாலையில் குணா குகை, மோயர் பாய்ண்ட், பைன் மரக்காடுகள், பசுமை பள்ளத்தாக்கு, தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் உள்ளன. அதில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் பராமரிப்புப் பணி காரணமாக கடந்த 2 நாட்களாக மூடப்பட்டது. இந்நிலையில் 12 மைல் சுற்றுச் சாலையில் உள்ள சுற்றுச்சூழல் சுற்றுலா இடங்களை நாளை (ஆக.18) முதல் சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்படுகிறது என வனத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, வனப்பகுதிக்குள் நுழையும் வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்று (ஆர்சி), காப்பீடு சான்றிதழ், மாசு சான்றிதழ் ஆகிய 4 சான்றிதழ் கட்டாயம். இந்த சான்றிதழ்கள் இல்லையெனில் வனப்பகுதிக்குள் அனுமதிக்கப்படாது. வாகன நுழைவு கட்டணம் மற்றும் சுற்றுலா இடங்களுக்கான டிக்கெட்டுகள் மோயர் சதுக்கத்தில் வைத்து விநியோகிக்கப்படும். இதற்கு முன், அந்தந்த சுற்றுலா இடங்களில் தனித்தனியே டிக்கெட் பெறும் நிலை இருந்தது.
மோயர் சதுக்கத்தில் இருந்து பேரிஜம் ஏரிப் பகுதிக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதனால், ஒரு நாளைக்கு 50 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிக்காக வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் மூடப்படும் என கொடைக்கானல் வன அலுவலர் யோகேஷ்குமார் மீனா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT