Published : 14 Aug 2023 04:45 PM
Last Updated : 14 Aug 2023 04:45 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், முதன்மை சுற்றுலாத் தலமாக விளங்குவது செஞ்சிக் கோட்டை. இக்கோட்டையை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பின்படி, வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் அதிகமாக கண்டு களித்த இடங்களில் இந்திய அளவில் மாமல்லபுரத்துக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தை செஞ்சிக் கோட்டை பிடித்துள்ளது. செஞ்சிக் கோட்டையை தொல்பொருள் ஆய்வுத்துறையினர், பழமை மாறாமல் பராமரித்து வருகின்றனர்.
இந்தக் கோட்டைப் பகுதியை சுற்றுலாபயணிகள் விரும்பும் வகையில் இன்னும் பொலிவாக்க வேண்டும் என்ற எண்ணம் வலுத்து வருகிறது. செஞ்சிக் கோட்டையில் ஆஞ்சநேயர் கோயில் அருகே சர்க்கரைகுளம், செட்டிகுளம் என இரு குளங்கள்உள்ளன. அவைகள் படகு சவாரிக்கு தகுதி வாய்ந்தவையாக உள்ளன. மேலும், ராஜா கோட்டை - ராணி கோட்டை இடையே ரோப் கார் விட வேண்டும் என்றும் வலியு றுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கடந்தாண்டு அக்டோபர் 31-ம் தேதி நடைபெற்ற செஞ்சி பேரூராட்சி மன்றக்கூட்டத்தில், செஞ்சிக் கோட்டையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ரோப் கார், படகு சவாரி, பேட்டரி கார் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்திட்டம் தொடர்பான தற்போதைய நிலை என்ன? என்று செஞ்சி பேரூராட்சித்தலைவர் மொக்தியார் அலி மஸ்தானை கேட்டபோது, “செஞ்சிக் கோட்டையில் ரூ.150 கோடி மதிப்பில் ரோப் கார், ரூ.30 லட்சத்தில் படகு சவாரி, ரூ.9 லட்சம் மதிப்பில் கோட்டைப்பாதையில் நடந்து செல்வோர் இடையில் இளைப்பாற 50 மீட்டருக்கு இடையே ஒரு இருக்கைகள், ரூ. 46 லட்சத்தில் செஞ்சி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை யொட்டி வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பேட்டரி கார் அமைக்கவும், செஞ்சி நகரில் இருந்து செஞ்சிக் கோட்டை வரை சாலைகளை பலப்படுத்தவும், கோட்டையில் உரிய வடிகால் வசதி ஏற்படுத்தவும் ரூ 3.30 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, சுற்றுலாத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை இம்மதிப்பீட்டை ஏற்று மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பி ஒப்புதல் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
செஞ்சிக் கோட்டையை சுற்றுலாதலமாக்க ஆரணி மக்களவை உறுப்பினர் விஷ்ணு பிரசாத் பக்க பலமாக உள்ளார். தற்போது செஞ்சி நகரில் இருந்து, செஞ்சிக் கோட்டைக்குள் செல்லும் சாலை அமைக்க தடையில்லா சான்றை மத்திய தொல்லியல்துறை வழங்கியுள்ளது. விரைவில் இப்பணிகள் தொடங்கும்.
கோட்டைக்குள் இந்த வசதிகளையெல்லாம் செய்து கொடுத்தால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். ராஜா கோட்டையில் இருந்து ராணி கோட்டைக்கும், ராணி கோட்டையில் இருந்து ராஜா கோட்டைக்கும் சுற்றுலா பயணிகள் ரோப் காரில் பயணிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT