Published : 14 Aug 2023 04:31 PM
Last Updated : 14 Aug 2023 04:31 PM

மதுரையின் ‘பிளிரா யானை’ - மன்னர் காலம் முதல் பாதுகாக்கப்படும் ஒற்றைக் கல் அதிசயம்!

மதுரை: மதுரையில் பெரிய மலைத்தொடர்கள் இல்லை. பசுமலை, திருப்பரங்குன்றம் மலை, நாகமலை, யானை மலை என சிறிய குன்றுகளே உள்ளன. அதில் நகரின் 3 ஆயிரம் ஆண்டுகால வரலாற்றோடு தொடர்புடைய யானை மலை முக்கியமானது.

மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள இந்த மலை தொலைவில் இருந்து பார்த்தால் யானை ஒன்று படுத்திருப்பது போன்று காட்சியளிப்பதால் யானை மலை எனக் கூறப்படுகிறது. மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒத்தக்கடை அருகே அமைந்துள்ளது. மதுரையை நெருங்கும் போது வாகனங்களில் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் இந்த மலையை வியப்புடன் பார்த்துச் செல்வர்.

சிலர் மலையின் பின்னணயில் புகைப்படம் எடுத்து மகிழ்வர். யானை மலையைச் சுற்றி ஒத்தக்கடை, கொடிக்குளம், நரசிங்கம், மலைச் சாமிபுரம், அரும்பனூர், கொடிக்குளம், உலகனேரி, உத்தங்குடி, புதுதாமரைப்பட்டி, உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வியலோடு தொடர்புடையது. இயற்கை ஆர்வலர்கள், இந்த மலைக்கு இயற்கை நடை சென்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த யானை மலையில், 8-ம் நூற்றாண்டில் மலையைக் குடைந்து கட்டப்பட்ட முருகன் கோயில் ஒன்று உள்ளது. அதேபோல், 9-ம் நூற்றாண்டில் சமணர்கள் இங்கு வந்ததற்கான ஆதாரங்களாக சமணப் படுக்கைகள், கல்வெட்டுகள் உள்ளன. இயற்கையாகவும், வரலாற்று ரீதியாகவும் சங்க இலக்கியங்களிலும் பல்வேறு சிறப்புப் பெற்ற இந்த யானை மலையை 2010-ம் ஆண்டில் சிற்பக்கலை நகரமாக மாற்ற தமிழக அரசு முடிவெடுத்தது.

அப்போது மதுரையில் கிரானைட் தொழில் உச்சத்தில் இருந்தது. இதற்கு உள்ளூர் மக்கள், அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டம் நடத்தி எதிர்ப்புத் தெரிவித்ததால் திட்டம் கைவிடப்பட்டது. இப்படி யானை மலை வரலாற்றுக் காலம் முதல் நவீன காலம் வரை பல்வேறு தடைகளைத் தாண்டி காப்பாற்றப்பட்டது. அவ்வப்போது இங்கு திரைப்பட படப்பிடிப்புகளும் நடக்கின்றன.

இது குறித்து சிற்பக் கலையின் பயிற்று நரும், தொல்லியல் ஆர்வலருமான தேவி அறிவுச்செல்வம் கூறியதாவது: வரலாறு என்பது வாழும் முழுமை. அதன் ஏதேனும் ஓர் அங்கம் நீக்கப்பட்டால் அது உயிரற்ற பொருளாகி விடும். தற்போது யானை மலையை சுற்றி வாழும் மக்களிடம், அம்மலையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கல்வெட்டுகள் மட்டுமின்றி சங்க இலக்கியங்களிலும் இம்மலையைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், யானைமலையில் சமணர்கள் பள்ளிகளை அமைத்துத் தங்கி இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்திலும் யானைமலை பற்றிய குறிப்பு உள்ளது. அகநானூறு, கலித்தொகை ஆகியவற்றிலும் யானை மலை பற்றிய தகவல்கள் உள்ளன.

அகநானூற்றில் 2 பாடல்களிலும் கலித்தொகையில் ஒரு பாடலிலும் யானைமலை பற்றி பதிவுசெய்யப்பட்டு உள்ளது. யானை மலை 4000 மீட்டர் நீளம்,1200 மீட்டர் அகலம், 400 மீட்டர் உயரம் கொண்டது. இதில், யானை மலையில் சமணப் படுக்கைகளைப் பார்க்க செல்லும் இடம் வரை மட்டுமே படிக்கட்டுகள் உள்ளன.

அதற்கு மேல் யானை மலையின் படுக்கைப் பகுதிக்கு செல்வதற்கு முறையான பாதைகள் இல்லை. விவரம் தெரிந்தவர்கள் மூலம் மட்டுமே மேலே செல்ல முடிகிறது. சுற்றுலாப் பயணிகள் யானை மலையைச் சென்று பார்வையிட ஆர்வமாக இருந்தாலும், அதற்கான வழிகாட்டுதல், பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x