Published : 13 Aug 2023 02:30 PM
Last Updated : 13 Aug 2023 02:30 PM

ஏலகிரியில் மீண்டும் பறக்குமா ‘பாரா கிளைடிங்’?

திருப்பத்தூர்: எழில் கொஞ்சும் ஏலகிரி மலையின் அழகை ரசிக்க மீண்டும் 'பாரா கிளைடிங்' சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை சாகச சுற்றுலாப் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.

'பாரா கிளைடிங்' சேவை ஏலகிரி மலையின் சுற்றுலா வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்றும் கூறப்படுகிறது. ஜவ்வாது மலை தொடரின் ஒரு நீட்சியாக இருக்கும் ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று கூறும் அளவுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,400 மீட்டர் உயரம் கொண்ட ஏலகிரி மலை 14 சிறிய மலை கிராமங்களை உள்ளடக்கியது.

சென்னை - பெங்களூரு ஆகிய இரண்டு பெரு நகரங்களுக்கு இடையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஏலகிரி மலை தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. ஏலகிரி மலையின் சுற்றுலா வளர்ச்சி அடுத்த சில ஆண்டுகளில் அபிரிதமாக இருக்கும் என கூறப்படுகிறது.

உயரமான மலைத்தொடர், பசுமையான வனம், மனதுக்கு அமைதியை ஏற்படுத்தும் சூழல் என ஏலகிரியின் பெருமைகளை கூறிக்கொண்டே செல்லலாம். ஏலகிரி மலையில் உள்ள புங்கனூர் ஏரி சுமார் 56 சதுர மீட்டர் பரப்பளவுடன் சுற்றுலாப் பயணிகள் அவசியம் செல்லும் இடமாக உள்ளது. அங்குள்ள படகு சவாரி குழந்தைகள் முதல் பெரியவர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.

பல வகை தாவரங்கள் அடங்கிய இயற்கை பூங்கா, சுவாமி மலை முருகன் கோயில், நிலாவூர் ஏரி என ஏலகிரி மலையை ரசிக்க வேண்டிய பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அண்டை மாவட்டங்கள், மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளையும் ஈர்க்கும் திறன் ஏலகிரிக்கு உள்ளது. சிறந்த கட்டமைப்புகள், அடிப்படை வசதிகள் கொண்ட ஏலகிரியில் மீண்டும் 'பாரா கிளைடிங்' சாகசத்தை கொண்டுவர வேண்டும் என சாகச சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏலகிரி மலை சுற்றுலாத்தலமாக மாற்ற முயற்சிகள் மேற்கொண்டபோது 'பாரா கிளைடிங்' சாகசம் அறிமுகம் செய்யப்பட்டது. 'பாரா கிளைடிங்'கில் ஏலகிரியின் மொத்த இயற்கை அழகையும் ரசிக்க முடியும். 'பாரா கிளைடிங்'கில் பறப்பதற்கான காற்று ஏலகிரி மலைத் தொடரில் வீசுவதால் 'பாரா கிளைடிங்'கில் பறப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.

அந்த நேரத்தில் போதுமான அடிப்படை வசதிகள் குறைவாக இருந்ததாலும், அதிக கட்டணம் மற்றும் ஆர்வம் குறைந்த பல்வேறு காரணங்களால் 'பாரா கிளைடிங்' சேவை நிறுத்தப்பட்டது. ஏலகிரி மலைசுற்றுலா வளர்ச்சிக்கு அரசு தற்போது முக்கியத்துவம் அளித்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு மட்டும் ஏலகிரி மலைக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்தாண்டில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாகச சுற்றுலா: ஏலகிரி மலையின் சுற்றுலா வளர்ச்சியில் அடுத்த முக்கிய இடத்தைசாகச சுற்றுலாத்தலம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏலகிரி மலை அத்தனாவூரில் 7.09 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடியில் நடைபெற்று வரும் பணிகள் நிறைவு பெற்றால் இன்னும் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் ஏலகிரிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாகச சுற்றுலாத் தலத்தில் உணவகம்,வரவேற்பறையின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சுற்றுலாத் தலத்தில் செயற்கை பாறை ஏறுதல், 'ட்ரெக்கிங்' பயணம் செய்யும் வசதியுடன் இரவு நேர 'கேம்ப் பயர்' நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த மையத்தில் டென்டில் தங்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கு சாகச சுற்றுலாப் பயணிகள் தரப்பில் வரவேற்பு இருக்கும் என்று சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீண்டும் ‘பாரா கிளைடிங்’?: ரூ.3 கோடியில் மேம்படுத்தப்படும் சாகச சுற்றுலாத் திட்டத்தில் 'பாரா கிளைடிங்'கையும் சேர்க்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘பாரா கிளைடிங் சேவை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

சாகச சுற்றுலாத்தலம் கட்டுமானப் பணிகள் முடிந்ததும் அதையும் தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும். 'பாரா கிளைடிங்' சாகச பயணம் செய்வதில் முன் அனுபவம் உள்ள நிறுவனங்கள் வந்தால் அனுமதி அளிக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x