Last Updated : 10 Aug, 2023 11:33 AM

 

Published : 10 Aug 2023 11:33 AM
Last Updated : 10 Aug 2023 11:33 AM

சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியான மூணாறு: தோட்டம் முதல் தொழிற்சாலை வரை சுற்றுலா தலமாக மாற்றம்

தேயிலை தோட்டங்களுக்குள் ஆர்வமுடன் சுய புகைப்படம் எடுத்துக் கொள்ளும் சுற்றுலாப் பயணிகள்

போடி: தேனி மாவட்ட எல்லையில் கேரள மாநிலம் மூணாறு அமைந்துள்ளது. இங்கு தேயிலைத் தோட்டங்களே அதிகம் என்பதால், மாற்று வேலை வாய்ப்பாக சுற்றுலா சார்ந்த தொழில்கள் அபரிமிதமாக வளர்ந்து விட்டன.

தேநீர் கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், ஆட்டோ, ஜீப் இயக்கம், கலைப் பொருள் விற்பனை, புகைப்படத் தொழில், வீட்டு தயாரிப்பு சாக்லேட்டுகள், வழிகாட்டிகள் என வெளியூர் பயணிகளை நம்பியே இங்கு பலர் தொழில் செய்கின்றனர். இதில் சுற்றுலாப் பயணிகளை கவர தேயிலைத் தோட்ட உரிமையாளர்களும் களமிறங்கி உள்ளனர்.

சமீபகாலமாக இங்கு நறுமணச் சுற்றுலா பிரபலமாகி வருகிறது. இதற்காக தங்கள் தோட்டத்தில் உள்ள ஏலக்காய், காபி, மிளகு, தேயிலை உள்ளிட்ட பயிர்களை பார்வையிட சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்று, அவற்றின் சிறப்புகள் குறித்து விளக்குகின்றனர். இதற்காக தலா ரூ. 100 முதல் ரூ. 300 வரை கட்டணம் நிர்ணயிக்கின்றனர்.

தோட்டத்தின் முகப்பில் விற்பனையகம் ஒன்றையும் அமைத்துள்ளனர். அங்கு ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட நறுமணப் பொருட்கள், சாக்லேட், கலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் சில தோட்டங்களில் கண்காணிப்பு கோபுரம், மரத்தில் சிறு குடில்கள் அமைத்து சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றனர்.

இதேபோல், பிரபல முன்னணி தேயிலை தொழிற்சாலைகளும் தங்கள் ஆலையை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வசதி செய்து தந்துள்ளன. இங்கு தேயிலை உலர்த்தப்படும் விதம், தேயிலைகளின் ரகங்கள், திரவ வடிவிலான தேயிலை என்று பலவற்றையும் சுற்றிக்காட்டுகின்றனர். இதற்கு ரூ.100 முதல் ரூ.250 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சீசன் நேரங்களில் வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். பலரும் பேருந்து, வேன் போன்ற வாகனங்களில் கூட்டம், கூட்டமாக வருவதால் தேயிலை தொழிற்சாலைகள் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகின்றன.

மணி

இது குறித்து மூணாறைச் சேர்ந்த வழிகாட்டி மணி என்பவர் கூறியதாவது: சுற்றுலாதான் இங்கு பிரதான தொழிலே. குறிப்பிட்ட இடங்கள் மட்டும் இருந்தால் சலிப்பை ஏற்படுத்தும். அடுத்தடுத்த ஆண்டுகளில் யாரும் வரமாட்டார்கள். ஆகவே போட்டி போட்டிக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சுற்றுலாப் பகுதிகள் உருவாகி வருகின்றன என்றார்.

கான்கிரீட் கட்டிடங்கள், வெயிலின் தாக்கம், பரபரப்பான வாழ்க்கை என்று தரைதளத்தில் வாழ்பவர்களுக்கு மூணாறின் பருவநிலையும், சுற்றுலாத் தளங்களும் குதூகலமான மன நிலையை ஏற்படுத்துகிறது. இதனால் செலவைப் பற்றி கவலைப்படாமல் இங்கு வருவோர் விடுமுறையை நன்கு அனுபவிக்கின்றனர்.

இருப்பினும் எவ்வித கட்டுப்பாடுமின்றி தனியார் அமைப்புகள், தனி நபர்கள் இஷ்டத்துக்கு சுற்றுலா இடங்களை அதிகரித்துக் கொண்டே செல்வது ஆபத்தையும் விளைவிக்கும் என்பதால் அங்குள்ள சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x