Last Updated : 08 Aug, 2023 03:46 PM

 

Published : 08 Aug 2023 03:46 PM
Last Updated : 08 Aug 2023 03:46 PM

சிதிலமடைந்துள்ள வைகை அணை பாலர் விடுதி: சுற்றுலாப் பயணிகளுக்கும் பலனில்லை... விசேஷம் நடத்தவும் வழியில்லை!

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பூங்கா அமைக்கப்பட்டது.

இது வடகரை, தென்கரை என்று இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு, குழந்தைகள் பூங்கா, அலங்காரப் பூச்செடிகள், உயிரியல் பூங்கா, இசை நீரூற்று, மாதிரி அணை வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் உருவாக்கப்பட்டன. கடந்த 1959-ம் ஆண்டு அணை திறக்கப்பட்டபோது, இப்பகுதியில் போக்குவரத்து வசதி பெரியளவில் இல்லை.

இதனால் உரிய நேரத்துக்கு வரவும், வீட்டுக்கு திரும்பிச் செல்லவும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால் அணையின் வட பகுதியில் 1960-ம் ஆண்டு செப்.28-ம் தேதி பாலர் விடுதி கட்டப்பட்டு திறக்கப்பட்டது. சிறுவர்கள் அதிகளவில் பூங்காவை பார்த்து ரசித்து விளையாடி மகிழ வேண்டும் என்பதற்காக திறக்கப்பட்ட இந்த விடுதியில், குழந்தைகளுடன் பெரியவர்களும் தங்கிக் கொள்ளலாம்.

கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் உணவு வசதியும் செய்து தரப்பட்டது. இங்குள்ள முகப்பு மாடத்திலிருந்து நீர்த்தேக்கத்தையும், பூங்காவையும் தெளிவாகக் காணலாம். மேலும், இரண்டாம் வகுப்பு தனி அறைகளும் விடுதி வளாகப் பகுதியில் தனித்தனியே கட்டப் பட்டன.

இந்த வசதியால் வெளியூரிலிருந்து வந்த பலரும் அணையையும், பூங்காக்களையும் பார்த்து ரசித்ததுடன், இங்கு இரவில் தங்கிக் கொண்டனர். ஆனால், காலப்போக்கில் பராமரிப்பு குறைந்துகொண்டே சென்றதால், அடிப்படை வசதிகளில் குறைபாடு ஏற்பட்டது. பின்னர், இது சமுதாயக் கூடமாக மாற்றப்பட்டது.

தனியார் திருமண மண்டபங்கள் அதிகம் இல்லாத அக்காலத்தில், வைகை அணையைச் சுற்றியுள்ள முதலக்கம்பட்டி, காமக் காபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பெரிதும் பயனடைந்தனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களின் வீட்டு விசேஷம், கட்சிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் உள்ளிட்டவை இங்குதான் நடந்துள்ளன.

ஆனால், நீர்வளத் துறையைச் சேர்ந்த முகாம் பிரிவு அதிகாரிகள் பல ஆண்டுகளாக இக்கட்டிடத்தை பராமரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் கதவுகள், ஜன்னல்கள் உடைந்து, கழிப்பறை மற்றும் குளியலறைகளும் சிதிலமடைந்து கிடக்கின்றன. சுற்றுலாப் பயணிகள் தங்கும் அறைகளும் புதர்மண்டி விஷ ஜந்துக்களின் புகலிடமாக உள்ளது.

நிகழ்ச்சி நடத்துவதற்கான சிமென்ட் மேடைப் பகுதியின் படிக்கட்டுகள் மற்றும் சுற்றுத்தளமும் சிதலமடைந்துள்ளன. மொத்தத்தில் இந்த பாலர் விடுதி இன்று பரிதாபமான நிலையில் உள்ளது. கடந்த தலைமுறையினரின் மலரும் நினைவுகளாக உள்ள இந்த விடுதியை சீரமைத்தால், சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும். இதன் மூலம் இப்பகுதி வர்த்தகமும் வளர்ச்சி பெறும் என சமூகநல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து முகாம் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், "மண்டபத்தில் விசேஷங்கள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை அவர்களே தற்காலிகமாக செய்து கொள்கின்றனர். மற்றபடி தங்கும் அளவுக்கு இங்கு வசதிகள் இல்லை. பராமரிப்புக்கான நிதி ஒதுக்கீடு குறைவாகவே வருகிறது. இதனால் முழுமையாக இதை புதுப்பிக்க முடியவில்லை" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x