Published : 07 Aug 2023 04:41 PM
Last Updated : 07 Aug 2023 04:41 PM
நாமக்கல்: கொல்லிமலை வாசலூர்பட்டி ஏரி நிரம்பியுள்ள நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் பராமரிப்பு இல்லாததால் ஏரி படகு இல்லத்தைச் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையுள்ளது.
இயற்கை வளமும், மூலிகை வளமும் நிறைந்த கொல்லிமலைக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இருக்கும். இங்கு வரும் பயணிகள் இங்குள்ள மலைகளைத் தொட்டுச் செல்லும் மேகக் கூட்டத்தை ரசிப்பதோடு, சுவாசிக்கும் மூலிகை காற்று உடலுக்குப் புத்துணர்ச்சியை ஊட்டும்.
மேலும், சுற்றுலாப் பயணிகள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் பொழுதைக் கழிக்க கொல்லிமலை வாசலூர்பட்டி ஏரியில் கடந்த 2007-ம் ஆண்டு பூங்காவுடன் கூடிய படகு இல்லம் திறக்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 3 படகுகள் ஏரியில் இயக்கப்பட்டன. கடந்த காலங்களில் கொல்லிமலைக்குச் சுற்றுலா வரும் பயணிகள் வாசலூர்பட்டி படகு இல்லத்தில் குழந்தைகளுடன் மகிழ்ந்து பொழுதைக் கழிக்க தவறுவதில்லை.
இங்கு உயர்ந்து நிற்கும் மரங்களுக்கு இடையே அமைதியான சூழலில் நீர் ததும்பி நிற்கும் ஏரியில் படகில் சவாரி செய்வது அலாதியான இன்பத்தைத் தரும். அதுவும் குழந்தைகளுக்குக் கூடுதல் குதூகலத்தை ஏற்படுத்தும். படகு சவாரிக்கு பயணிகளிடம் குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அண்மையில் பெய்த மழை காரணமாக ஏரியில் நீர் நிரம்பியுள்ளது.
ஆனால், படகு இல்லம் கடந்த ஓராண்டுக்கு மேலாக முறையான பராமரிப்பு இல்லாததால், படகு துறை படிக்கட்டுகள் சேதமடைந்து, படகுகள் அனைத்தும் சேதமாகிப் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால், வார மற்றும் விடுமுறை நாட்களில் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையுள்ளது.
கொல்லிமலைக்குச் சுற்றுலா வரும் பயணிகள் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தாலும், குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் படகு இல்லத்தைச் சீரமைத்து, கூடுதல் படகுகளுடன் மீண்டும் செயல்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT