Published : 30 Jul 2023 04:03 AM
Last Updated : 30 Jul 2023 04:03 AM
முட்டுக்காடு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முட்டுக்காடு படகு இல்லத்தில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் சுகாதார வளாகம், கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்பு, பிளாஸ்டிக் பாட்டில்களை தூளாக்கும் இயந்திரம், காற்றில் இருந்து குடி தண்ணீர் தயாரிக்கும் இயந்திரம், சிறுவர் பூங்கா ஆகியவற்றை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று திறந்து வைத்தார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் 9 இடங்களில் படகு குழாம்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவை படகுகள், இயந்திர படகுகள், வேகமான இயந்திர படகுகள், துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகளை வருகை தரவைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடிநீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முட்டுக் காடு படகு இல்லத்தில் 2022 – 23-ம் நிதி ஆண்டில் 2,82,142 சுற்றுலா பயணிகள் சாகச படகு சவாரி செய்தனர். 2023 – 24-ம் நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் இன்று வரை 1,17,922 பயணிகள் சாகச படகு சவாரி செய்துள்ளனர்.
முட்டுக்காடு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை செய்து தரும் வகையில் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தினர், நேட்டிவ் மெடிகேர் சாரிடபுள் டிரஸ்ட் நிறுவனத்தினருடன் இணைந்து தனியார் நிறுவனங்களின் சமூகபங்களிப்பு நிதியின் கீழ் ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் சுகாதார வளாகம், கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்பு, பிளாஸ்டிக் பாட்டில்களை தூளாக்கும் இயந்திரம், காற்றில் இருந்து குடிதண்ணீர் தயாரிக்கும் இயந்திரம், சிறுவர் பூங்கா போன்றவற்றை அமைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இவற்றை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சார் ஆட்சியர் லட்சுமி பதி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பொது மேலாளர் லி.பாரதி தேவி, பயிற்சி ஆட்சியர் ஆனந்த் குமார்,
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் வித்யாத் சிங், சுனில், அலெக்ஸ் விஜய், நேட்டிவ் மெடிகேர் சாரிடபுள் டிரஸ்ட் நிறுவனத்தின் நிர்வாகி எ.எஸ்.சங்கர நாராயணன், பொது மேலாளர் லி.பாரதி தேவி உட்பட தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT