Published : 27 Jul 2023 02:38 PM
Last Updated : 27 Jul 2023 02:38 PM
ஏலகிரி: ஏலகிரி மலை காவல் நிலையத்தில் போதுமான எண்ணிக்கையில் காவலர்கள் இல்லை. அதனால், குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சுற்றுலா தலங்களில் ஏலகிரி மலையும் ஒன்று. ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரி மலையில் ஆண்டு முழுவதும் ஒரே சீதோஷ்ண நிலை நிலவுவதாலும், இயற்கை எழில் மிகுந்த பகுதியாக இருப்பதாலும் வார இறுதி நாட்களில் இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஜோலார் பேட்டையில் இருந்து ஏலகிரி மலை ஏறத்தாழ 20 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த மலையில் 14 கிராமங்கள் உள்ளன. ஏலகிரி மலையின் மக்கள் தொகை 12,500-ஆக உள்ளது. தனி ஊராட்சியாக ஏலகிரி மலை விளங்கி வருகிறது. மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
இந்த ஒவ்வொரு வளைவுகளுக்கும் தமிழ் அறிஞர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் ஏலகிரி மலைக்கு அதிகமாக வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் வசதிக்காக இந்த மலையில் நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகள் உள்ளன. மலைவாழ் மக்களின் பிரதான தொழிலாக விவசாயம், கால்நடை வளர்ப்பு, தோட்டம் பராமரிப்பு உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். இயற்கை முறையில் வேளாண்மையை விரிவு படுத்தும் முயற்சியில் ஏலகிரி மலை விவசாயிகள் முயன்று வருகின்றனர்.
கம்பு, சோளம், நெல், கரும்பு, கீரை போன்ற பயிர் வகைகளும், மா, பலா, வாழை, மாதுளை, சப்போட்டா, கொய்யா போன்ற பழ வகைகளும், ரோஜா, சாமந்தி, மல்லி, முல்லை போன்ற பூ வகைகள் இந்த மலையில் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. சுற்றுலா பயணிகளின் வருகையால் ஏலகிரி மலை பாதையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சமீபகாலமாக குற்றச்செயல்களும் அதிகரித்து வருகின்றன.
இதை சரி செய்ய ஏலகிரி மலையில் காவல் நிலையம் தனியாக இருந்தும், போதுமான காவலர்கள் பணியமர்த்தப்படாமல் உள்ளனர். இதனால், மலைவாழ் மக்களும், மலையில் தொழில் நடத்தி வருவோரும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். மேலும், ஏலகிரி மலையில் உள்ள காவல் நிலையம் உதவி காவல் ஆய்வாளரை கொண்டே இயங்கி வருகிறது.
காவல் நிலையம் தொடங்கி கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் கடந்தும், காவல் ஆய்வாளர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. வழக்கு, புகார் சம்பந்தமாக காவல் ஆய்வாளரை தான் சந்திக்க வேண்டும் என்ற நிலை ஏற்படும்போது மலைவாழ் மக்கள் 20 கி.மீ., தொலைவுள்ள ஜோலார் பேட்டை காவல் நிலையத்துக்கு செல்ல வேண்டும்.
பொது மக்களின் இந்த சிரமத்தை சரி செய்ய ஏலகிரி மலையில் உள்ள காவல் நிலையத்துக்கு தனியாக காவல் ஆய்வாளரை பணியமர்த்த வேண்டும். மேலும், காவலர்கள் மலையிலேயே தங்கி பணியாற்ற அவர்களுக்கான தனி குடியிருப்பு பகுதி கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, ‘‘ஏலகிரி மலை காவல் நிலையம் பெயரளவுக்கே செயல்படுகிறது. 29 பேர் பணியாற்றக்கூடிய காவல் நிலையத்தில் தற்போது 14 பேர் மட்டுமே உள்ளனர். இவர்கள் தங்குவதற்காக மலை பகுதியில் குடியிருப்பு வசதி இல்லாததால், 20 கி.மீ., தொலைவுள்ள ஜோலார்பேட்டை நகரத்துக்கு தினசரி சென்று வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட போது ஏலகிரி மலை கொட்டையூர் பகுதியில் காவலர்களுக்கான குடியிருப்பு கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. 3 ஆண்டுகள் கடந்தும் அதற்கான பணிகள் தொடங்கவில்லை. மேலும், காவல் ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதை நிரப்பவேண்டும். மலை முழுவதும், மலை பாதைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
குற்றச்செயல்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் ஜோலார்பேட்டையில் இருந்து காவல் ஆய்வாளரும், திருப்பத்தூரில் இருந்து துணை காவல் கண்காணிப்பாளரும் வர வேண்டியுள்ளது. அவர்கள் வருவதற்குள் பிரச்சினை பெரிதாகி விடுகிறது. எனவே, காவல் ஆய்வாளரை நியமித்து, 30 காவலர்களுடன் செயல்படும் வகையில் ஏலகிரி காவல் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்’’ என்றனர்.
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் கேட்டபோது, ‘‘ஏலகிரி காவல் நிலையத்துக்கு தனியாக காவல் ஆய்வாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் காவல் ஆய்வாளர் அங்கு பணியமர்த்தப்படுவார். காவலர் குடியிருப்பு கட்ட மஞ்சம்கொல்லை அடுத்த பனந்தோப்பு பகுதியில் 1.50 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வருவாய்த் துறையினருக்கு சொந்தமான இடத்தில் விரைவில் குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். மலை பிரதேசங்களில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், அங்குள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட காவல் துறை முனைப்புடன் பணியாற்றி வருகிறது. புதூர் நாடு பகுதியில்புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டதை போல, வாணியம்பாடி அடுத்த மணியாரக் குப்பம் பகுதியிலும் புறக் காவல் நிலையம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். திருப்பத்தூர் மாவட்ட மலைவாழ் மக்கள் அச்சமின்றி வாழ காவல் துறை உரிய பாதுகாப்பு வழங்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT