சேலம் கோரிமேட்டில் இருந்து குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா செல்ல வாகன வசதி தொடக்கம்
சேலம்: சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவுக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக, வனத்துறை சார்பில் கோரிமேட்டில் இருந்து உயிரியல் பூங்கா வரை வாகன வசதி தொடங்கப்பட்டுள்ளது.
சேலத்தில் இருந்து 12 கி.மீ தொலைவில் சேர்வராயன் மலை அடிவாரத்தில் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு புள்ளி மான், கடமான், முதலை, ஆமை, மலைப்பாம்பு, நரி, மயில், வெள்ளை மயில், குரங்கு, வெளிநாட்டு நீர் பறவைகள் உள்ளிட்டவை பராமரிக்கப் படுகின்றன.
பூங்கா வளாகத்தில் வண்ணத்துப் பூச்சி பூங்கா, செயற்கை அருவி, விலங்குகளின் தத்ரூபமான உருவம் பொறிக்கப்பட்ட கல்தூண்கள் என பார்வையாளர்களைக் கவரும் இடங்கள் உள்ளன. விரைவில், பூங்காவை விரிவுபடுத்தி, சிங்கம், புலி, சிறுத்தை உள்பட 10 வகை விலங்குகளைக் கொண்டு வர வனத்துறை திட்டமிட்டுள்ளது.
பூங்காவை, சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வசதியாக, மூன்று பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், பேட்டரியால் இயங்கும் வாடகை சைக்கிள் வசதியும் உள்ளது. பூங்காவுக்கு சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள் ஆகியவற்றின் போது சுற்றுலாப் பயணிகளின் வருகை கூடுதலாகிறது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் எளிதில் வந்து செல்ல வசதியாக, சேலம் கோரிமேடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து, குரும்பப்பட்டி பூங்கா வரை வனத்துறை சார்பில் வாகன வசதி தொடங்கப்பட்டுள்ளது. சூழல் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கையாக, 2 வேன்களின் இயக்கத்தை மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங்க் ரவி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், உதவி வனப்பாதுகாவலர் செல்வகுமார், பூங்கா வனச்சரகர் கமலநாதன், வனப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வனத்துறை சார்பில் இயக்கப்படும் வேனில், கோரிமேட்டில் இருந்து குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவுக்கு சென்று திரும்ப கட்டணமாக, பெரியவர்களுக்கு ரூ.20, சிறியவர்களுக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. 5 வயதுக்குட் பட்டவர் களுக்கு கட்டணம் கிடையாது. சுற்றுலாப் பயணிகளின் தேவைக் கேற்ப வனத்துறை வாகனம் இயக்கப்பட உள்ளது.
