Last Updated : 20 Jul, 2023 03:18 PM

 

Published : 20 Jul 2023 03:18 PM
Last Updated : 20 Jul 2023 03:18 PM

சதுப்பு நில காடுகளின் சொர்க்க பூமி... பிச்சாவரம் புதுப்பொலிவு பெறுமா?

கடலூர்: தமிழகத்தின் மற்ற சுற்றுலாத் தலங்களைக் காட்டிலும் தனிச்சிறப்பு வாய்ந்தது பிச்சாவரம். 3 ஆயிரம் ஏக்கரில், பரந்துவிரிந்த அழகான சதுப்பு நிலக்காடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த முகத்துவார பகுதி. இங்கு படகுச் சவாரி செய்து கொண்டே, அங்குள்ள சதுப்பு நில தாவரங்களை ரசித்த படி செல்வது தனிசுகம். அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வலசை வந்து போகும் பல்வேறு பறவையினங்களை குறிப்பிட்ட கால வெளிகளில், சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்வது இன்னும் சிறப்பு. ஆண்டுக்கு சராசரியாக 4 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

கடந்த 1984-ம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் பிச்சாவரம் படகு குழாம் தொடங்கப்பட்டது. தற்போது படகு குழாமில் 15 மோட்டார் படகுகள், 35 துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கென தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே படகுச் சவாரிக்கு அனுமதியளிக்கப்படுகிறது.

3 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்திருக்கும் சுந்தரவன காடுகள், அதன் நடுவே 4 ஆயிரத்து 400 சிறுசிறு கால்வாய் திட்டுக்கள், பல்வகை மூலிகைத் தாவரங்கள், உலகெங்கும் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து வந்து செல்லும் 177 வகையான பறவைகள் என ஒரு போதும் சலிப்பை ஏற்படுத்தாத, மனதை மயக்கும் ரம்மியமான ஒரு இடம் இது.

படகு குழாமின் முன்பு சிறுவர் விளையாட்டு பூங்கா, உயர் கோபுரம், தங்கும் விடுதி உள்ளிட்டவைகள் உள்ளன. இருப்பினும் இன்னும் சிறப்பான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.

இதற்கிடையே, பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் கிளஸ்டர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.14.07 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள தமிழகஅரசால் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிதியைக் கொண்டு வாகன நிறுத்துமிடம், சிறுவர் விளையாட்டு பூங்கா மேம்பாடு, ரவுண்டான அமைத்தல், ரெஸ்டாரெண்ட் கட்டும் பணி, கழிப்பறைகள் கட்டும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

இதைத் தாண்டி, பிச்சாவரத்தில் உள்ள தீவுப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான ‘காட்டேஜ்’ அமைக்க வேண்டும். நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும். நவீன மயமாக்கப்பட்ட தங்குமிடம் கட்ட வேண்டும். நியாயமான கட்டணத்தில் உணவு விடுதி அமைக்க வேண்டும். சுகாதாரமான கழிப்பறைகளோடு. குடிநீர் வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.

இங்குள்ள திட்டுப் பகுதியில் இருந்து கடல் வரை சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் திட்டத்தையும் தொடங்கலாம். தற்போதுள்ள துடுப்பு மற்றும் இயந்திர படகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதற்கு தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்கி அதற்கான பணிகளை செய்ய வேண்டும். இதையெல்லாம் திட்டமிட்டு, கூடுதல் நிதி ஒதுக்கி நிறைவாகச் செய்தால் பிச்சாவரம் சுற்றுலா பயணிகளை இன்னும் கவர்ந்திழுக்கும்.

வேறு எங்கும் இது போன்ற இயற்கைச் சூழல் இல்லை. நமது கடலூர் மாவட்டத்துக்காக இயற்கை நமக்களித்த கொடையை வெளி உலகுக்கு வெளிப்படுத்த, சுற்றுலா பயணிகள் அதிகமானோர் இங்கு வந்து, அதன் மூலம் உள்ளூர் வணிகம் மேம்பட இந்த மேம்பாட்டுப் பணிகளை தெளிவாக திட்டமிட்டு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x