Published : 13 Jul 2023 03:50 PM
Last Updated : 13 Jul 2023 03:50 PM
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து 23 கி.மீ. தொலைவில் இடையகோட்டை ஊராட்சி உள்ளது. இந்த ஊருக்கு அழகையும், வளத்தையும் சேர்ப்பது இந்த மண்ணில் பாய்ந்தோடும் நங்காஞ்சியாறுதான்.
இடையகோட்டையில் விவசாயம் மட்டுமே பிரதானத் தொழில். அதற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு. மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள பரப்பாலாறு அணைக்கு பாச்சலூர், வடகாடு, புலிக்குத்தி காடு பகுதிகளில் இருந்து தண்ணீர், விருப்பாச்சி மலைக்குன்று வழியாக தலையூத்தில் அருவியாகக் கொட்டுகிறது.
2008-ல் கட்டிய அணை: மலையடிவாரத்தில் இருந்து பல நூறு கி.மீ. தொலைவுக்கு நங்காஞ்சியாறாக ஓடுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வழிந்தோடும் நீரை தேக்கிவைக்க ஒட்டன்சத்திரம் அருகே வடகாட்டில் பரப்பலாறு அணை கட்டப்பட்டது. அணை நிரம்பிய பின் திறந்து விடப்படும் நீரால் 50-க்கும் மேற்பட்ட பாசனக் குளங்கள் நிரம்பிய பின் ஆறு, ஓடைகள் வழியாக கரூர் மாவட்டத்துக்குச் சென்று அமராவதி ஆற்றில் கலந்து கடலுக்குச் சென்றது.
இதைத் தடுக்க, நங்காஞ்சியாற்றின் குறுக்கே, பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பின் ரூ.41.67 கோடி மதிப்பில் 2008-ல் அணை கட்டி திறக்கப்பட்டது. அணையின் நீர்த்தேக்கப் பரப்பு 398 ஏக்கர். மொத்த நீளம் 2,680 மீட்டர். 39 அடி கொள்ளளவு கொண்ட அணையில், பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிட நான்கு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அணை மூலம் இடையகோட்டை ஊராட்சியில் 1,500 ஏக்கர், வலையபட்டி ஊராட்சியில் 775 ஏக்கர், சின்னக்காம்பட்டி ஊராட்சியில் 400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கரூர் மாவட்டத்திலும் 3,600 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பராமரிப்பில்லாத அணை: இடையகோட்டை, வலையபட்டி, சின்னக்காம்பட்டி ஊராட்சியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது. தற்போது போதுமான பராமரிப்பின்றி அணையின் கரைப்பகுதி, மதில்சுவர், அணைக்குச் செல்லும் படிக்கட்டுகள் மீது முட்செடிகள் வளர்ந்துள்ளன. தண்ணீர் வரும் பாதை, வரத்து வாய்க்கால்களிலும் புதர் மண்டிக் கிடக்கிறது.
அணைக்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. இதைப் பொதுப்பணித் துறையினர் சரி செய்ய வேண்டும். விடுமுறை நாட்களில் அணைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அதனால் அணையைச் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தி, இங்கு வரும் மக்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை, குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்களுடன் பூங்கா போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து ஒட்டன்சத்திரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் அமைச்சருமான அர.சக்கரபாணி கூறுகையில், `ஒட்டன்சத்திரம் தொகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த பரப்பலாறு அணை, தலையூத்து அருவி சுற்றுலாத் தலமாக்கப்பட உள்ளது. இதற்காக, 8.22 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதே போல், நங்காஞ்சியாறு அணையையும் சுற்றுலாத் தலமாக்கும் திட்டம் உள்ளது', என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT