Published : 06 Jul 2023 06:45 PM
Last Updated : 06 Jul 2023 06:45 PM
போடி: போடி - சென்னை ரயிலை பயன்படுத்தி, நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருப்பதி உள்ளிட்ட ஆன்மிக மற்றும் கடற்கரை சுற்றுலாத் தலங்களுக்கு தேனி மாவட்ட மக்கள் ஆர்வத்துடன் பயணித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து தேனி வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயிலும் (06701), மதுரை வரை இயக்கப்பட்ட சென்னை ஏசி எக்ஸ்பிரஸ் ரயிலும் (20601), கடந்த ஜூன் 15-ம் தேதி முதல் போடி வரை நீட்டித்து இயக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் போடியிலிருந்து கிளம்பும் ரயில், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி, பெரம்பூர் வழியாக சென்னை சென்ட்ரலை அடைகிறது. இதேபோல், திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் எதிர்மார்க்கமாக போடிக்கு ரயில் (20602) இயக்கப்படுகிறது.
போடியிலிருந்து இரவு 8.30 மணிக்கு கிளம்பும் சென்னை ரயில், மதுரைக்கு இரவு 10.45 மணிக்கு செல்கிறது. அங்கு இறங்கினால், சுமார் 40 நிமிட இடைவெளியில் மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16729) இரவு 11.25 மணிக்கு கிளம்புகிறது. இந்த ரயிலுக்கு மாறும் பலர், நாகர்கோவில், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் செல்கின்றனர்.
குறிப்பாக, அதிகாலை 4.20 மணிக்கு இந்த ரயில் நாகர்கோவில் சென்றடைவதால், அங்குள்ள நாகராஜர் கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்களை எளிதில் தரிசிக்க முடிகிறது. பின்னர், அங்கிருந்து பேருந்து மூலம் கன்னியாகுமரிக்குச் செல்லலாம்.
இதேபோல், இந்த ரயிலில் திருவனந்தபுரத்துக்கு நேரடியாகச் செல்பவர்கள், அங்குள்ள பத்மநாப சுவாமி கோயில், பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் போன்ற ஆலயங்களை தரிசிக்கின்றனர். மேலும், விலங்குகள் பூங்கா, அருங்காட்சியகம், கோவளம் பீச், வர்கலா கடற்கரை போன்ற சுற்றுலா பகுதிகளுக்கும் குடும்பத்துடன் சென்று மகிழ்கின்றனர்.
திருப்பதிக்கும் செல்லலாம்: போடி - சென்னை ரயில் அதிகாலை 5.15 மணிக்கு காட்பாடி செல்கிறது. அங்கிருந்து பக்தர்கள் பலர் திருப்பதி செல்லும் முன்பதிவற்ற மெமு ரயிலில் 6.15 மணிக்கு சிரமமின்றி பயணிக்கும் நிலை உள்ளது. இதன்மூலம், திருப்பதிக்கு காலை 8.45 மணிக்கு செல்ல முடிகிறது.
இது குறித்து தேனியைச் சேர்ந்த அய்யனார் என்பவர் கூறுகையில், "அடிக்கடி திருப்பதி சென்று வருவது வழக்கம். இதற்காக, தேனியில் இருந்து பேருந்து மூலம் திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து ராமேசுவரம்-திருப்பதி ரயிலில் இரவு 8.45 மணிக்கு ஏறுவேன். இந்த ரயில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் வழியாக சுற்றிச் சென்று, காலை 10.30 மணிக்கு திருப்பதியை அடையும்.
ஆனால், தற்போது போடி ரயிலில் காட்பாடி நிலையத்தில் இறங்கி மாறி பயணிப்பதன் மூலம், காலை 8.45 மணிக்கே திருப்பதிக்குச் செல்ல முடிகிறது. கடந்த வாரம் போடி ரயிலிலில் திருப்பதிக்கு பயணித்து முடிகாணிக்கை செலுத்திவிட்டு வந்தேன்" என்றார்.
சுற்றுலாப் பயணி செல்வராஜ் கூறுகையில், "திருவனந்தபுரம், வர்கலா பீச் போன்ற பகுதிகளுக்கு அடிக்கடி குடும்பத்துடன் சுற்றுலா செல்வோம். தேனியிலிருந்து பேருந்து மூலம் ஆரப்பாளையம் மற்றும் மதுரை ரயில் நிலையத்துக்கு 2 பேருந்துகள் மாறிச் சென்று, புனலூர் ரயிலில் ஏறுவோம். தற்போது, போடியிலிருந்தே ரயில் உள்ளதால், தேனியிலிருந்து மதுரை ரயில் நிலையத்துக்கு நேரடியாக எளிதாக செல்ல முடிகிறது. இது எங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT