Published : 03 Jul 2023 07:24 PM
Last Updated : 03 Jul 2023 07:24 PM
சென்னை: தமிழகத்தின் வடகோடியில் உள்ள பழவேற்காடு மிக முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு கடலும் ஏரியும் இணையும் முகத்துவாரப் பகுதி, சமயேஸ்வரர், ஆதிநாராயணப் பெருமாள் கோயில், கலங்கரை விளக்கம், மகிமை மாதா ஆலயம், சின்ன மசூதி, டச்சுக்காரர்களின் கல்லறை, பறவைகள் சரணாலயம் ஆகியவை அமைந்துள்ளன. இவற்றைச் சுற்றிப் பார்ப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் பழவேற்காட்டுக்கு வருகின்றனர்.
ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, உணவகம், தங்கும் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இங்கே சரிவர இல்லை என்பதே கசப்பான உண்மை. இத்தகைய குறைகள் பல இருப்பினும், வார விடுமுறை நாட்களில் பழவேற்காட்டை சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக, பழவேற்காடு ஏரி இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய உவர்ப்பு நீர் ஏரியாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக மீனவர்கள் சொந்தப் படகுகளில் படகு சவாரி அழைத்து செல்கிறார்கள். 2 மணி நேர படகு சவாரிக்கு ரூ.1500 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால், இவை எல்லாம் சட்டபூர்வமாக இல்லை. பழவேற்காட்டில் படகு சவாரி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அங்குள்ள மீனவ மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக படகு சவாரியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு போதிய பாதுகாப்புடன் பழவேற்காட்டில் படகு சவாரியை ஏற்று நடத்த வேண்டும். அவ்வாறு அரசு ஏற்று நடத்தினால் தான் விபத்துகளை தவிர்க்க முடியும் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும், பழவேற்காடு பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அரசு எந்தவித வசதிகளும் ஏற்படுத்தி தரவில்லை என்று அப்பகுதி மக்களும், சுற்றுலாப் பயணிகளும் குற்றம்சாட்டுகின்றனர். குறைந்தபட்சம், சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் திண்பண்டங்கள், பிளாஸ்டிக் கவர்கள், தண்ணீர் பாடல்களை கடற்கரை மணலிலேயே ஆங்காங்கே போட்டுவிட்டு செல்கிறார்கள். இதனால் பழவேற்காடு கடற்கரை மணற்பகுதி குப்பை மேடாக காட்சி அளிப்பதுடன் சூழலியலும் பாதிக்கப்படுவது மற்றொரு கவலைக்குரிய விஷயம்.
பழவேற்காட்டை சுற்றுலா தலமாக மேம்படுத்துவது குறித்து அப்பகுதி அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கைகள்...
கலாராணி: “பழவேற்காடு வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புவது படகு சவாரிதான். இந்தப் பகுதியில் தனியார் படகு சவாரிகளுக்கு சுமார் ரூ.1000 முதல் 1500 வரை செலுத்தி சுற்றுலா பயணிகள் செலுத்தி வருகிறார்கள். ஆனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கழிவறை, குடிநீர் உள்ளிட்ட எந்தவித வசதிகளையும் அரசு செய்யவில்லை. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வார விடுமுறை நாட்களில் இருசக்கர வாகனங்கள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.ஆனால், இந்தப் பகுதியில் உள்ள சாலைகள் மோசமாக உள்ளன. எனவே இங்கு உள்ள சாலைகளையும், சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகளையும் அரசு செய்து தர வேண்டும்.”
ராஜூ: “பழவேற்காடு பகுதியில்தான் பல ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் படகுகளில் சவாரி செய்து முகத்துவாரம் உள்ளிட்ட பகுதிகளைக் கண்டு ரசிப்பதை விரும்புவர். ஆனால், இப்படி படகில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள், உயிர் காக்கும் கவசம் உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு சாதனங்களும் இல்லாமல் செல்கின்றனர்.
ஆபத்தான இந்தப் பயணத்தால் பல விபத்துகளும் நடந்து இருக்கிறது. எனவே, அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும். படகுகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கான பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். படகு சவாரி செல்லும் இடங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.”
ஜெய்சங்கர்: “நான் பழவேற்காடு குணங்குப்பம் கிராமத்தில் வசித்து வருகிறேன். பழவேற்காட்டுக்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் படகுகள் மூலம்தான் அவர்கள் படகு சவாரிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இந்தப் பகுதியில் அதிகமான சிறிய தீவுகள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் படகு சவாரிக்கு செல்கின்றனர்.
ஆனால், அந்த இடங்களில், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட எந்த வசதிகளும் இருப்பதில்லை. இதனால் கூட்டமாக வரும் சுற்றுலாப் பயணிகள் நெகிழிப்பைகள், குடிநீர், குளிர்பான பாட்டில்கள், சில சமயங்களில் தண்ணீரிலும், மணல் பாங்கான பகுதிகளிலும் வீசி செல்கின்றனர். இதனால், கடல் மற்றும் ஏரி நீரும், நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகிறது. எனவே, இவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.”
நாராயணன் “பழவேற்காடு கலங்கரை விளக்கம் பகுதியில் 50 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இந்தப் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் எளிதாக சென்று வருவதற்கான வசதிகள் இல்லை. குறிப்பாக, கலங்கரை விளக்கம் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கழிவறை தண்ணீர் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. பழவேற்காடு ஏரியில் தனியார் படகு சவாரிதான் நடந்து கொண்டு இருக்கிறது. படகுகளில் சவாரி செய்வதற்கு இஷ்டம்போல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, அரசு இதை ஏற்று நடத்த முன்வரவேண்டும். இந்தப் பகுதியில் உள்ள மீனவர்களே படகு சவாரி நடந்த அரசு அனுமதி அளிக்க வேண்டும். படகு சவாரிக்கான கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு, பழவேற்காட்டை சிறந்த சுற்றுலாத் தளமாக மாற்ற அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே அங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT