Published : 03 Jul 2023 03:06 PM
Last Updated : 03 Jul 2023 03:06 PM
தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் ரூ.18 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்று (ஜூலை 3) நேரில் ஆய்வு செய்தார்.
ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை சர்வதேச அளவில் மேம்படுத்த அரசு தமிழக அரசு திட்டமிட்டது. அதைத் தொடர்ந்து இப்பணிகளை மேற்கொள்ள ரூ.17.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இத்திட்டப் பணிகளுக்காக, ஒகேனக்கலில் 3.10 ஏக்கர் நிலம் தருமபுரி மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நுழைவு வாயில், பார்வையாளர் மாடம், பரிசல் நிறுத்துமிடம், எண்ணெய் குளியலுக்கான இடங்கள், உடைமாற்றும் அறை மற்றும் பாதுகாப்புடன் குளிக்க வசதி ஏற்படுத்துதல், டிக்கெட் கவுன்ட்டர், பரிசல் நிறுத்துமிடம், மசாஜ் பகுதி, ஆழ்குழாய் கிணறு, உணவகம், சொகுசு நடைபாதை, எண்ணெய் கழிவு சுத்திகரிப்பு நிலையம், காட்சி கோபுரம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று நேரில் ஆய்வு செய்து பணியின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் ஒகேனக்கல்லில் காவிரியாற்றோர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளிடம் ஆட்சியர் தெரிவித்தார்.
பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஒகேனக்கல் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. இந்த தலத்தின் தரத்தை சர்வதேச அளவில் மேம்படுத்தும் வகையிலான திட்டத்தை தமிழக அரசு உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. விரைவில் இந்த சுற்றுலா தலம் புதுப்பொலிவு பெறும். இந்த சுற்றுலா தலத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளும் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். பிளாஸ்டிக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT