Published : 24 Jun 2023 05:06 AM
Last Updated : 24 Jun 2023 05:06 AM
சென்னை: பெருநகரங்கள், சுற்றுலா தலங்களில் உள்ள ஓட்டல்கள், விடுதிகளில் ஓட்டுநர்கள் தங்குவதற்கு ஓய்வுக் கூடங்கள் அமைக்குமாறு தலைமைச் செயலர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வீட்டுவசதி துறை செயலர் அபூர்வாவுக்கு தலைமைச் செயலர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தற்போதைய சூழலில் தங்கும் விடுதிகள், ஓட்டல் தொழில்கள் நன்கு வளர்ச்சி அடைந்து வருகின்றன. பொதுமக்கள் பணிச்சூழலால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் விதமாக, விடுமுறை நாட்களில் இதுபோன்ற இடங்களுக்கு அதிகம் செல்கின்றனர். பெரும்பாலும், இதுபோன்ற பயணம் தற்செயலானது என்பதால், பலரும் ஓட்டுநர்களை மட்டும் பணியமர்த்திக் கொண்டு, தங்களது கார் போன்ற சொந்த வாகனங்களில் செல்கின்றனர்.
ஓட்டுநர்களை கவனிப்பதில்லை: ஓட்டல்கள், விடுதிகளில் சொகுசு அறைகளை எடுத்து தங்கும் அவர்கள், உடன் வந்த ஓட்டுநர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். அந்த ஓட்டுநர்கள் வேறு வழியின்றி, அந்த விடுதியின் வராண்டா பகுதி அல்லது வந்த காரிலேயே மிகுந்த சிரமத்துடன் இரவு தங்குகின்றனர். அசவுகரியம் காரணமாக அவர்களால் இரவு சரியாக தூங்க முடிவது இல்லை. அதே களைப்புடன் மறுநாள் வாகனம் ஓட்டும் நிலையில், அந்த அசவுகரியமே விபத்துக்கு காரணமாகிறது.
எனவே, விடுதிகள், ஓட்டல்கள், லாட்ஜ்களில் வாகன ஓட்டுநர்கள் தங்குவதற்கு கட்டாயம் ஓய்வுக் கூடங்களை அமைக்க வேண்டும். இதற்காக சாதாரணமான தொகையை வசூலிக்கலாம். வாகன நிறுத்த கட்டணத்தில்கூட அதை இணைத்து பெறலாம்.
எனவே, பெருநகரங்கள், சுற்றுலா பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளின் கட்டுமானத்துக்கு திட்ட அனுமதி கோரும்போது, ஓட்டுநர் தங்கும் விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு இதுபோல மனிதாபிமானத்துடன் உதவும்போது, விபத்துகளை தவிர்க்கலாம். சாலை பாதுகாப்பு, ஓட்டுநர்கள் நலனில் உங்களது இந்த நடவடிக்கை வரவேற்பை பெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT