Published : 22 Jun 2023 04:55 PM
Last Updated : 22 Jun 2023 04:55 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் - கும்பகோணம் வழியாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்கு நேரடியாக சுற்றுலா ரயிலை வரும் அடுத்த மாதம் 1-ம் தேதி இயக்க இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் முடிவு செய்துள்ளது. பாரத் கவ்ரவ் சுற்றுலா ரயில் வரிசையில் இந்த ரயில் அடுத்த மாதம் 1-ம் தேதி திருவனந்தபுரம், கொச்சுவேலியில் காலை புறப்பட்டு திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்திற்கு அன்று மாலை வந்து சேரும்.
அங்கிருந்து ஆன்மிக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை வழியாக அடுத்த மாதம் 3-ம் தேதி ஹைதராபாத் நகரில் டெக்கான் சார்மினார், கோல்கொண்டா, 5-ம் தேதி ஆக்ராவில் தாஜ்மகால், மதுராவில் கிருஷ்ணர் பிறப்பிடம், 6-ம் தேதி கத்ராவில் மாதா வைஷ்ணவ் தேவி கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறது.
பின்னர், அங்கிருந்து 8-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பொற்கோயில் மற்றும் இந்தியப் பாகிஸ்தான் எல்லையான இட்டாரி (வாஹா) பார்த்த பின் 9-ம் தேதி மற்றும் 10-ம் தேதி புதுடெல்லியில் குதுப்மினார், இந்தியா கேட், இந்திராகாந்தி அருங்காட்சியகம், அஷர்தம் கோயில், லோட்டஸ் கோயில் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறது.
சுற்றுலா நிறைவடைந்து இந்தச் சிறப்பு சுற்றுலா ரயில் அடுத்த மாதம் 12-ம் தேதி மாலை கும்பகோணம் மற்றும் தஞ்சாவூருக்கு மீண்டும் வந்தடைகிறது. முற்றிலும் சுற்றுலாப் பயணிகளை மட்டும் ஏற்றிச்செல்லும் இந்த சிறப்பு ரயிலில் சாதாரண பயணிகள் பயணிக்க முடியாது. மேலும், 12 நாட்கள் சுற்றுலாவிற்குப் பயண கட்டணம், சைவ உணவு, தங்கும் வசதி, உள்ளூர் போக்குவரத்து ஏற்பாடு, நிறுவன மேலாளர், சுற்றுலா வழிகாட்டி மற்றும் பாதுகாவலர் உள்ளிட்ட வசதிகள் சுற்றுலா நிறுவனத்தால் செய்யப்படுகிறது.
ஒரு நபருக்குச் சாதாரண படுக்கை வசதி ரூ. 22,350-ம், குளிர்சாதன படுக்கை வசதியுடன் ரூ.40,380-ம் எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விபரங்கள் மற்றும் முன்பதிவிற்கு இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவன சென்னை பொறுப்பாளர் விஜய் சாரதியை 82879 31965 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT