Published : 21 Jun 2023 06:30 AM
Last Updated : 21 Jun 2023 06:30 AM
வேலூர்: கொச்சுவேலியில் இருந்து ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு யாத்திரை மேற்கொள்ள பாரத் கவுரவ் சிறப்பு ரயில் ஜூலை 1-ம் தேதி இயக்கப்படவுள்ளதாக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக தென்மண்டல பொது மேலாளர் ரவிக்குமார் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி) தென்மண்டல பொது மேலாளர் ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா பிரிவு சார்பில் சுற்றுலா பயணிகளுக்காக பிரத்யேக ‘பாரத் கவுரவ்’ என்ற சிறப்பு ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
14 பெட்டிகள் உள்ள இந்த சிறப்பு சுற்றுலா ரயிலில் 3 குளிர்சாதன பெட்டிகள், 8 படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகள், 1 சமையல் அறை பெட்டி என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன. 750 பேர் பயணிக்கலாம்.
வரும் ஜூலை 1-ம் தேதி கொச்சுவேலியில் இருந்து புறப்படும் இந்த ரயில் 12 நாட்கள் இயக்கப்படவுள்ளது. கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் எழும்பூர் வழியாக ஹைதராபாத், ஆக்ரா, மதுரா வைஷ்ணவி தேவி (கட்ரா), அமிர்தசரஸ், புதுடெல்லி ஆகிய இடங்களுக்கு செல்கிறது. அங்கு உள்ள முக்கிய சுற்றுலா மற்றும் சமய தலங்களை பயணிகள் பார்வையிட்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கான பயண கட்டணமாக ஒருவருக்கு படுக்கை வசதி வகுப்புக்கு ரூ.22ஆயிரத்து 350-ம், குளிர்சாதன வசதி பெட்டியில் ரூ.40 ஆயிரத்து 380 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் இடங்களை பார்வையிடுவதற்கான போக்குவரத்து மற்றும் ரயில் பயணத்தின்போது தென்னிந்திய சைவ உணவு மற்றும் சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் பாதுகாவலர் வசதியுடன் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் வரை பயண காப்புறுதியும் அடங்கியுள்ளது.
இதற்கு ‘ஆன்லைன்' மூலம் முன்பதிவு செய்யலாம். ஒவ்வொரு மாதமும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும். வரும் காலங்களில் காட்பாடியில் இந்த ரயில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT