Last Updated : 16 Jun, 2023 02:58 PM

 

Published : 16 Jun 2023 02:58 PM
Last Updated : 16 Jun 2023 02:58 PM

கோவையில் 2 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் வஉசி உயிரியல் பூங்கா

கோவை: கோவை மாநகர மக்களின் பிரதான பொழுதுபோக்கு மையமாக காந்திபுரம் நேரு மைதானம் அருகேயுள்ள ‘வஉசி உயிரியல் பூங்கா’ இருந்தது. இந்த பூங்கா ஏறத்தாழ 5 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த பூங்காவில் சிங்கம், புலி, யானை உள்ளிட்ட விலங்குகள் இருந்தன.

பின்னர், பராமரிப்பதில் சிரமம் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட வெவ்வேறு பூங்காக்களுக்கு மாற்றம் செய்யப்பட்டன. தற்போது பூங்காவில் குரங்கு, நரி,மான் உள்ளிட்ட விலங்கினங்கள், பெலிகன், வாத்து, ஈமு, கிளிகள் உள்ளிட்ட பறவையினங்கள், முதலை, பாம்புகள் என 500-க்கும்மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பூங்கா வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. பூங்காவில் உள்ள உயிரினங்களை பார்வையிடவும், பசுமையான சூழலை அனுபவிக்கவும் தினமும் ஏராளமானோர் இந்த பூங்காவுக்கு வந்தனர். குறிப்பாக, வார இறுதி நாட்கள், பண்டிகை விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

பூங்காவுக்கான உரிமம் மத்திய வனஉயிரின ஆணையத்தின் சார்பில் வழங்கப்பட்டு வந்தது. ஒவ்வொருமுறையும் உரிமத்தை புதுப்பிக்கும் போதுஆணையம் சார்பில் வன விலங்குகளுக்கு தேவையான மேம்பாட்டு பணிகளை செய்ய பூங்கா நிர்வாகத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அவை பின்பற்றப்படாததால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை.

இதனால் உரிமம் காலாவதியானது. சமூக செயல்பாட்டாளர்ராஜ்குமார் கூறும் போது,‘‘கோவை மாநகரின் முக்கிய பொழுதுபோக்கு இடமான உயிரியல் பூங்கா முன்பு எப்படிக் காணப்பட்டதோ அதே போன்ற சூழலை மீண்டும் ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சூழலில், இப்பூங்காவை பறவைகள் பூங்காவாக மாற்றம் செய்து மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். அதற்கான நடவடிக்கையையாவது மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்த வேண்டும்,’’ என்றார்.

மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறும்போது, ‘‘பூங்காவில் உள்ள விலங்குகளை வெவ்வேறு பூங்காக்களுக்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. முதலைகளை அமராவதி நகர் பண்ணைக்கும், பாம்புகளை கிண்டிக்கும்மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. வண்டலூர் பூங்காவுக்கு சில விலங்குகள் அனுப்பப்படும். எந்தெந்த உயிரினங்களை எங்கு விடலாம் என வனத்துறை செயலருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பறவைகளை மட்டும் இங்கு வைத்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு வகை பறவைகளும் கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்படும். பறவைகள் பூங்கா விரைவில் அமைக்கப்படும்,’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x